Sunday, 4 October 2015

Procedure to follow when purchasing property from an NRI

சென்னையை சேர்ந்த வெள்ளை வேட்டி வெங்கட்ராமன், வக்கீல் குமாஸ்தாவாக இருந்து கடினமாக உழைத்து படிப்படியாக முன்னேறியவர். தன் உடையை போலவே கையும் சுத்தம் என்பதால் பல ஆண்டுகள் கடின உழைப்பிற்குப் பிறகு ஒரு வழியாக 1986ம் ஆண்டில் தன் முதல் வீட்டை சென்னை தியாகராய நகரில் வாங்கினார். 

சிறிய வீடு தான் என்றாலும் எல்லா வசதிகளும் பக்கமாக இருந்ததால் மனைவியும் மகளும் எந்த குறையும் கூறாமல் ஆனந்தமாய் குடிபுகுந்தனர். வந்த சில வருடங்களிலேயே ஒரு ஆன்மீக புத்தகக் கடை தொடங்கி அமோகமாக லாபம் சம்பாதித்தார். பெண்ணுக்கு கல்யாணத்தையும் திருப்திகரமாக முடித்து வைத்தார். மாப்பிள்ளை ஸ்ரீராமன் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். வருடங்கள் கடந்தன, இரண்டு பேரன்கள், அழகாக வாழ்க்கை நகர்ந்தது. 

ஒரு நாள் “போதும் பா! வயசான காலத்தில் கடையில் போய் உக்காராட்டா என்ன, சாம்பு அங்கிள் பாத்துப்பார். எங்கள் வீட்டிற்கு அடுத்த வீடே விற்கப் போகிறார்கள், பேசாமல் வாங்கி இங்கயே வந்து ரெஸ்ட் எடுத்துக்கோயேன்” என்றாள் மகள். மகளோடு மருமகனும் மனைவியும் சேர்ந்துகொண்டனர். முடியாது என்று ஒற்றை காலில் நின்றவர் ப்ளீஸ் தாத்தா என்று பேரன் கேட்டதும் மறு கணமே சரி என்றுவிட்டார்.


வீடு வாங்கும் படலம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. பக்கத்து வீடு யூ எஸ் ஏ (USA)வில் இருக்கும் நாராயணனுடையது. போனில் நன்றாக பேசினார், வீடும் நன்கு விஸ்தாரமாக அழகாக இருந்தது. வெங்கட்ராமனின் மனைவிக்கு வீடு மிகவும் பிடித்துப் போனது. பெண் வீட்டின் பக்கமாக இருப்பதால் சிறிய குறைகளை பெரிது படுத்தாமல் வீட்டை வாங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். 

அப்போது ரியல் எஸ்டேட் மாப்பிள்ளை வெளிநாட்டு வாழ் இந்தியரின் சொத்தை வாங்குவதால், சில கூடுதல் விதிமுறைகள் இருப்பதாகக் கூறினார். “ஏதேனும் அதிக செலவு ஆகி விடாதே?” என்று சலனப்பட்ட மாமாவிடம் தெளிவாக விளக்கினார் ஸ்ரீராமன். 

ஒரு இந்திய வாழ் வரிதாரரிடம் இருந்து சொத்து வாங்குவதை விட ஒரு என் ஆர் ஐயிடம்சொத்து வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு அசையா சொத்தை வாங்கும் போது, இரண்டு விதிகளை தெளிவாக கருத்தில் கொள்ள வேண்டும். 

ஒன்று வருமான வரிப் பிரிவு 194IAன் படி ஒரு இந்திய வாழ் வரிதாரரிடம் இருந்து சொத்து வாங்கும் போது, சொத்தின் மதிப்பு ரூ.50,00,000க்கு மேல் இருந்தால் 1% வரியை கழித்து வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும். வரியை செலுத்த வரிக் கழிப்பு எண், அதாவது டேன் (TAN) தேவை இல்லை. 

உதாரணத்திற்கு வீட்டின் விலை ரூ. 70,00,000 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். வீட்டை வாங்குபவர் 1% அதாவது ரூ.70,000யை கழித்துவிட்டு ரூ.69,30,000 மட்டும் விற்பவருக்கு செலுத்திவிட்டு ரூ.70,000த்தை அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும். 26QB என்ற படிவத்தை https://onlineservices.tin.nsdl.com/etaxnew/tdsnontds.jsp என்ற வலைத்தளத்தில் பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். கழிக்கப்பட்ட வரியை இணையதளம் மூலமாக மட்டுமே செலுத்த முடியும். 26QBயை தாக்கல் செய்த பின் 16B என்ற படிவத்தை www.tdscpc.gov.in என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விற்பனையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இதை அவர் தான் செலுத்த வேண்டிய வரியிலிருந்து கழித்துக்கொள்ளலாம். 

ஒரு என்ஆர்ஐயிடம் அசையாச் சொத்து வாங்கும்போது 194IA வில் கூறப்பட்டுள்ள வரி விகிதம் செல்லாது. 195 விதிப்படி 20% வரியை கழித்து வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும்.

முன்பே எடுத்தது போல், வீட்டின் விலை ரூ. 70,00,000 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். விற்பவர் என்ஆர்ஐ ஆக இருக்கும்பட்சத்தில், 20%,  அதாவது ரூ.14,00,000 வரியை கழித்து பாக்கி ரூ.56,00,000 லட்சத்தை மட்டும் அவருக்கு செலுத்திவிட்டு, மீதம் ரூ.14,00,000த்தை வரித்துறைக்கு செலுத்த வேண்டும். 27Q என்ற படிவத்தை https://onlineservices.tin.nsdl.com/etaxnew/tdsnontds.jsp என்ற வலைத்தளத்தில் பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். கழிக்கப்பட்ட வரியை இணையதளம் மூலமாக மட்டுமே செலுத்த முடியும். 27Qயை தாக்கல் செய்த பின் 16A என்ற படிவத்தை www.tdscpc.gov.in என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விற்பனையாளரிடம் 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். 

“இவ்வளவு வேலை செய்தே ஆக வேண்டுமா மாப்ளே? கட்டாமல் விட்டா என்ன தான் ஆயிடப் போரது? “ என்றவரிடம், “விற்பனை செய்யும் என்ஆர்ஐயிடம் வரி குறைவாகவோ அல்லது கழிக்காமல் இருக்கவோ ஒரு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த சான்றிதழை வழங்கும் அதிகாரம் வருமானத் துறைக்கு மட்டுமே உள்ளது. எனவே அவர்கள் கொடுத்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே வரியை குறைவாகவோ கழிக்காமலோ இருக்க முடியும். அவ்வாறு இல்லாமல் வரியை கழிக்காமலோ. கழித்த வரியை செலுத்தாமல் விட்டாலோ, விற்பனை செய்தவர் கட்ட வேண்டிய அனைத்து வரியும் வாங்குபவரிடமிருந்து தான் மீட்கப்படும் என்றதும் முழித்துக் கொண்டார் வெங்கட்ராமன்.

வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை செய்து பார் என்பதைப்போல், என்ஆர்ஐயிடம் வீட்டை வாங்கிப்பார் என்றும் சேர்த்துவிடலாம் போல இருக்கிறதே என்று சலித்துக் கொண்டேவிற்பனை பத்திரங்களை தயார் செய்யும் வேலையில் இறங்கினார். 

(இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.)

No comments:

Post a Comment