Sunday, 4 October 2015

Can an NRI utilise Indian shares to take loans?

என்ஆர்ஐ இந்தியப் பங்குகளை வைத்து கடன் வாங்க முடியுமா?

ஆடிட்டர் ஜீ. கார்த்திகேயன்
பன்னாட்டு வரி ஆலோசகர், கோவை

  
கோபி, பல ஆண்டுகளுக்கு முன்னரே ஜெர்மனிக்குக் குடிபெயர்ந்தவர். உங்களது பெயர் என்ன என்று நண்பர்கள் கேட்டால் சுருக்கமாக “ஸ்ரீதர வேணு கோபால கிருஷ்ணன்” என்று தனது பெற்றோர்கள் வைத்த பெயரைக் கூறுவார். ஜெர்மன் மொழியின் தாக்கத்தில் கட்டுப்பட்டு அங்கேப் படிக்கச் சென்றவர், தராசு சம்பந்தமாக தொழிலில் ஈடுப்பட்டு அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.

அவரது தந்தை அவர் பெயரில் பல ஆண்டுகளாக ஷேர்களை வாங்கிக் குவித்தார். கோபியும் தனது தந்தையின் பழக்கத்தால் ஏராளமான ஷேர்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மகள் பிருந்தாவுக்கு திருமணம் செய்து கொடுத்த கோபி அடிக்கடி இந்தியா வந்து செல்ல அரம்பித்தார்.
நல்ல மாப்பிள்ளை, கை நிறைய வருமானம் மிகுந்த மரியாதையுடன் பழகி வந்தார். மும்பையில் இருக்கும் மகள் வாடகை வீட்டில் இருந்து வந்தது கோபியின் மனைவி சித்ராவிற்கு உறுத்தலாகவே இருந்தது. மகளுக்கு மும்பையில் ஒரு வீடு வாங்கித் தருமாறு மனைவி சித்ரா அடிக்கடிக் கூறிவந்தார்.

எதையுமே மனனவி சொல்படி கேட்டு நடக்கும் கோபி மகளுக்கு வீட்டை வாங்கித் தர முடிவு செய்தார்.
10வது மாடியில் காற்றோட்டமான 3 படுக்கை அறைகள் கொண்ட அபார்ட்மென்ட். செம்பூர் ஏரியை ரசித்தபடியே மாலை காப்பி அருந்த வேண்டும், உப்பரிகையிலிருந்து பார்த்தால் முழு நிலா தெரிய வேண்டும், அபார்ட்மென்ட்டைச் சுற்றி தோட்டம், நீச்சல் குளம் என்று மகள் பிருந்தாவிற்கு பல ஆசைகள் இருந்தன. அதை அடிக்கடி தன் தாயிடம் கூறி வந்தார்.
செம்பூரில் மகளுக்குப் பிடித்த வீடு குறைந்தபட்சம் ரூ. 2 கோடி ஆகும் என்று தெரித்த பின் அதன் அதற்கான பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என சிந்தித்தார். பல ஆண்டுகளாக வாங்கிய ஷேர்கள் மதிப்பில் உயர்ந்து கணிசமான தொகையைக் எட்டியது. அதற்கு எதிராக கடன் பெற முடியுமா என்று நண்பரிடம் வினாவினார்.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட டீலர் (Authorized Dealer), என்ஆர்ஐ (NRI) க்கு இந்தியப்பங்குகளுக்கு ஏதிராக கடன் கொடுக்க முடியும். அவ்வாறு கொடுக்கப்பட்ட கடனை தனிப்பட்ட செலவுகளுக்கோ அல்லது தொழில் சம்பந்தமான செலவுகளுக்கோ மட்டுமே பயன்படுத்த முடியும்.

அங்கீகரிக்கப்பட்ட டீலர் என்பது ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவன்ங்களைக் குறிக்கின்றது. தொழில் சம்பந்தமானசெலவுகள் என்பதில் , சீட்டுத் தொழில், நிதி நிறுவனம், பண்ணை வீடு கட்டுதல் மற்றும் வர்த்தக வளர்ச்சி உரிமைகள் (Tradable development rights) சம்பந்தமான தொழில்களில் பயன்படுத்த முடியாது. ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும் பங்குகளை வைத்து கடன் பெற முடியாது.

மேலே கூறப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் என்பதில் டவுன்ஷிப் மற்றும் சாலை மற்றும் மேம்பாலக் கட்டமைப்புத் தொழில்கள் பொருந்தாது. அதாவது டவுன்ஷிப் மற்றும் சாலை மற்றும் மேம்பாலக் கட்டமைப்புத் தொழில்கள் நடத்த  இந்தியப் பங்குகளை வைத்து கடன் வாங்க முடியும். 

கோபிக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தன்னிடம் இருக்கும் பங்குகளுக்கு எதிராக ரூ. 1.5 கோடி வரை கடனளிக்க பல வங்கிகள் முன்வந்தன. அதுவே அவருக்கு போதுமானதாகவும் இருந்தது. மனைவியிடம் கூறி ஒப்புதலும் வாங்கி விட்டார்.

ஆனால், அவர் ஜெர்மனியில் இருப்பதால் கடனை எப்படி திரும்பச் செலுத்துவது என்று சந்தேகம் கொண்டார். அவரது பல கேள்விகளுக்கும் அவருடைய மாப்பிள்ளையிடமே பதில் இருந்தது. 

கடன் கொடுக்கும் வங்கி ஒப்புக்கொண்ட கடனை என்ஆர் ஓ (NRO) வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த முடியும். மற்ற வெளிப்புற கணக்குகளில் (NRE, FCNR) செலுத்த முடியாது. அதே போன்று வாங்கிய கடனை இந்தியாவுக்கு  வெளியில் அடைக்க முடியாது. வெளிநாட்டு வங்கிக் கணக்குகளிருந்து இந்தியாவிற்கு அனுப்பியோ, இந்தியாவிலிருக்கும் என்ஆர்ஓ, என்ஆர்இ, எஃப்சிஎன்ஆர் (NRO, NRE , FCNR) கணக்குகள் மூலமாகவோ அல்லது பாதுகாப்பு ஆவணங்களாக அளித்த பங்குகளை விற்றோ மட்டுமே திருப்பி அடைக்க முடியும் என்றார். 


கோபிக்கு அது பெரிய சிக்கலான விஷயமாக தெரியவில்லை. ஆன்லைனிலேயே விண்ணப்பித்தார். பெரிய முறைபாடுகளின்றி சீக்கிரமே கடன் கிடைத்துவிட்டது.

அடடே! நம் இந்தியா நாம் நினைத்ததை விட வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே! என்று ஆனந்தம் அடைந்தார். வீட்டை பதிவு செய்தார். மகளுக்கும் மறுமகனுக்கும் வீடு மிகவும் பிடித்துவிட்டது. மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜெர்மனி திரும்பினார். 

(இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.)

No comments:

Post a Comment