Saturday 31 October 2015

Do you have to pay additional tax in the US?

கும்பகோணத்தைச் சேர்ந்த கார்த்தி கணேசன் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பன்னாட்டு சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஆர்டர் மேனேஜ்மென்ட்  தலைவர் (Order Management Head) ஆக பணி புரிந்து வந்தார். 
சிங்கப்பூர், துபாய், குவைத் என்று உலகமெல்லாம் பறந்து வந்தவர் பன்னாட்டு நடைமுறைகள், போட்டி மனப்பான்மை, புது தொழில்நுட்பங்களை தழுவிக்கொள்ளும் வேகம் ஆகியவற்றை பார்த்து வியந்து போனார். ஏற்கனவே படு சூட்டிப்பாக துறுதுறுவென சொன்னதையெல்லாம் புரிந்து  கொள்ளும் தன் 6 வயது மகன் ப்ரணவ் இதையெல்லம் பார்த்து வளர்ந்தால் மேலும் மெருகேறிவிடுவான் என்று முழுமையாக நம்பினார்.

தானும் அமெரிக்காவில் இடமாற்றம் பெற்றுக்கொண்டு அங்கேயே செட்டில ஆகிவிடலாம் என்றதும், எங்கிருந்தாலும் மற்ற எதை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம், தமிழ் கலாச்சாரமும், பழக்கவழக்கங்களும் இங்கு இருந்தால்தான் தன் மகன் கற்க முடியும் என்று போர்க் கொடி உயர்த்தினார் அவர் மனைவி நீரஜா. சரி ஒரிரு வருடங்கள் மட்டும் அங்கே இருந்து அவன் படிக்கட்டும் பிறகு திரும்ப வந்துவிடலாம் என்று கார்த்தி வெள்ளைக்கொடியைப் பறக்க விட்டதும் போர் ஓய்ந்த்து. 
மூவரும் அமெரிக்கா கிளம்ப ஆயத்தமாயினர். அரிசோனா மாகாணத்தில் இருக்கும் சிறந்த பள்ளியில் மகனை சேர்த்தார். அவருக்கு எஸ்எஸ்என் (SSN) கிடைத்துவிட்டது. மனைவிக்கும் மகனுக்கும் ஐஐஐபி டிபென்டென்ட் விசா (H1B Dependent VISA) இருந்ததால் எஸ்எஸ்என் பெற முடியவில்லை. மனைவி வேலைக்குச் செல்லாததாலும், மகன் பள்ளிக்குச் செல்ல ஐஐஐபி மட்டும் போதுமென்பதாலும் அதை பற்றி அவர் கவலைப்படவில்லை.

ஒரு வருடம் சென்றதே தெரியாமல் அழகாக கடந்து போனது. டாக்டர் மனைவி ஒரு முக்கிய பயிற்சிக்காக 2 மாதம் இந்தியா சென்றுவிட்டார்.  வரிப்படிவங்களை சமர்பிக்க தன் கம்பெனியின் சிபிஏ (CPA) -ஐ அணுகினார். அவர் அமெரிக்காவில் வரிப்படிவங்களில் வரிதாரின் மனைவியடன் (அவருக்கு வருமானம் இல்லாத பட்சத்திலும்) இணைந்து வரித்தாக்கல் செய்யும் சாத்தியம் உள்ளது. அதோடு மட்டும் இல்லாமல் தன்னைச் சார்த்து இருப்பவர்களையும் வரிப்படிவங்களில் குறிப்பிடலாம்.

அதற்காக குறிப்பிட்டத் தொகையை வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ள முடியும். இது அனைத்தும் வரிதாரர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களாகக் குறிப்பிடப்படுவோர் அமெரிக்காவில் ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள வரி ஆண்டில் குறைந்தது 183 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். வரிதாரரின் துணைவருக்கு 183 நாட்கள் இருக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை. அவரை குடியாளராக கருத ஒரு உறுதி ஆவணம் சமர்பித்தால் போதுமானது. ஆனால் அவர் வேறு நாடுகளில் வரிக்குட்படுத்தப்படும் போது அவ்விரு நாடுகளின் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தை பொருத்து இந்த விதி வேறுபடும்.

வரிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள இருவருக்கும் சோசியல் செக்யூரிட்டி நம்பர் (Social Security Number) அல்லது தனி நபர் வரி குறிப்பீட்டு எண்- (ஐடிஐஎன் - Individual Taxpayer Identification Number ITIN) கட்டாயமாக இருக்க வேண்டும். இரண்டுமே இல்லாதபட்சத்தில் வரிப்படிவத்தோடு ஐடிஐஎன் விண்ணப்பத்தையும் உடன் அனுப்ப வேண்டும் என்றார். வரிதாரரைச் சார்ந்தவர்களாகக் குறிப்பிடப்படுவோருக்கும் ஐடிஐஎன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஐடிஐஎன் என்றால் என்ன ?

ஐடிஐஎன் என்பது அமெரிக்காவின் வரித் துறை (Internal Revenue Service) வழங்கும் ஒரு 9 இலக்க வரிதாரர் அடையாள எண்ணாகும். வரித்தாக்கலைத் தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் ஐடிஐஎன் ஒரு அடையாள எண்ணாகப் பயன்படாது. எஸ்எஸ்என் வாங்க தகுதி பெறாத ஆனால் வரித்தாக்கல் செய்ய தேவைப்படும் அனைவருக்கும் அவருடைய குடிவரவு அந்தஸ்த்தைக் கணக்கில் கொள்ளாமல் ஐடிஐஎன் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

ஐடிஐஎன் விண்ணப்பம் டபிள்யூ -7 (W-7) என்ற படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்படுகிறது. டபிள்யூ -7 படிவத்தில் விண்ணப்பதாரரின் அடையாளங்களாக சமர்பிக்கப்படும் ஆவணங்களின் எண்களும், வரிதாரரின் எஸ்எஸ்என் எண்ணும், அவருக்கும் விண்ணப்பதார்ருக்கும் உள்ள தொடர்பு போன்ற விவரங்கள் இருக்கும். விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை வரிப்படிவங்களுடன் இணைத்து, ஆவணச் சான்றுகளுடன் ஐஆர் எஸ் (IRS) இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ, நேரில் சென்றோ சமர்பிக்கலாம். ஒப்புக்கொள்ளப்படும் ஆவணங்களில் பாஸ்போர்ட் மட்டுமே எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துவிடும்.

மற்ற ஆவணங்கள் குடிவரவு அந்தஸ்த்து அல்லது அடையாளம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவு செய்ய மட்டுமே பயன்படும். அவ்வாறு 13 ஆவணங்கள் உள்ளன. அனைத்து ஆவணங்களும் அசலாகவோ அல்லது சான்றளிக்கப்பட்ட நகல்களாகவோ மட்டுமே ஒப்புக்கொள்ளப்படும்.  

பொதுவாக, அமெரிக்காவின் வரித் துறை ஐடிஐஎன் விண்ணப்பங்களை அங்கீகரிக்க 4 முதல் 6 வாரங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. ஐடிஐஎன் உறுதியான பின்னர் தான் வரிப்படிவங்கள் மதிப்பீடு செய்யப்படும்.                   
இதனைக் கேட்டறிந்த கார்த்தி தன் மனைவி ஐடிஐஎன் விண்ணப்பிக்க அசல் ஆவணங்களை இந்தியாவிலிருந்து அனுப்பிவைப்பது பாதுகாப்பானது இல்லையே என்று கவலைக் கொண்டார். ஆனால் அவருடைய சிபிஏ (CPA), ஐடிஐஎன் விண்ணப்பங்களை சரிபார்த்து ஆவணங்களை உறுதி செய்ய அக்செப்டன்ஸ் ஏஜென்ட்ஸ் (Acceptance Agents) இந்தியாவிலேயே இருப்பதாகக் கூறினார். அக்செப்டன்ஸ் ஏஜென்ட்ஸ் என்பவர்கள் ஐஆர்எஸ் (IRS) ஆல் அனுமதிக்கப்பட்ட முகவர்கள். ஆவணங்களை சரிபார்த்து
சர்டிஃபிகேட் ஆஃப் அக்கூரசி (Certificate of Accuracy) என்ற படிவத்தை ஐஆர்எஸ் (IRS) க்கு அனுப்பி வைப்பர். அதை ஆதாரமாகக் கொண்டு ஐடிஐஎன் அங்கீகரிக்கப்படும் என்றதும் சற்று நிம்மதி கொண்டு வரித்தாக்கல் செய்யும் வேலையில் இறங்கினார்.

 (இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். )      

No comments:

Post a Comment