Sunday 8 January 2017

பண மதிப்பு நீக்கத்தால் பலன் கிடைத்ததா?

த்திய அரசு, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய்களை ‘பண மதிப்பு நீக்கம்’ என்று ஒரே மூச்சில் உறிஞ்சியதன் மூலம் இந்திய பணப் புழக்கத்தில் பெரும் இறுக்கம் ஏற்பட்டுள்ளது. 86 சதவிகித ரொக்கமான
ரூ.14.25 லட்சம் கோடியில் சுமார் ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளது. பொக்ரான் அணுகுண்டு வெடிப்புபோல, மிகமிக ரகசியமாக இந்தப் பொருளாதாரக் குண்டை மத்திய அரசு போட்டவுடன்க றுப்புப் பண முதலைகள், அரசியல் லாபதாரிகள் உண்மையிலேயே ஆடிப் போனார்கள். இந்தத் திட்டம் அறிவித்து 50 நாட்கள் முடிந்த நிலையில், இந்தத் திட்டத்தின் நோக்கம் வெற்றி பெற்றதா என்று பார்ப்போம்.


பலன்கள்!

இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததா என்று கேட்டால், இரு வேறு கருத்துக்கள் இருக்கும். தற்காலிக சிரமங்களும், வியாபார பாதிப்புகளும் இருந்தாலும் நீண்ட காலத்தில் இது மிகவும் பயன் அளிக்கக்கூடிய திட்டம். ரொக்கமற்ற பரிவர்த்தனை, கணக்கில் காட்டி செய்யக்கூடிய வியாபாரத்தினால் வரக்கூடிய நேரடி, மறைமுக வரிகள் அதிகரிக்கும். கறுப்புப் பணம் இனி உற்பத்தி ஆவது குறையும். ஊழல் நடப்பதும் இனி குறைய வாய்ப்புள்ளது. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் வருங்காலத்தில் நடக்கும். 
அரசுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் வருமான வரியாக சுமார் ரூ.2 லட்சம் கோடி ரூபாய் காண்பிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு வருமான வரித் துறையின் சர்வே, ரெய்டு போன்ற நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும். மேலும், வரும் நாட்களில் வரிச் சச்சரவு அதிகமாக இருக்கும்.

ரொக்கமில்லாப் பரிவர்த்தனை குறித்து, அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் மக்களுக்கு வங்கிப் பழக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் மூலம் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வங்கி மூலம் பரிவர்த்தனை செய்ய முற்படுவார்கள். இந்தப் பரிவர்த்தனைகள் கணக்கில் காண்பிக்கப்பட்டு, அதற்கான மறைமுக வரிகளும் நேர்முக வரிகளும் வசூலிக்கப்படும். ரொக்கமாக சம்பளம் பெறும் நிரந்தரமற்ற ஊழியர்கள் வங்கி மூலம் சம்பளம் பெறும்பட்சத்தில், பி.எஃப், இ.எஸ்.ஐ போன்ற தொழிலாளர் நலத் திட்டங்களின் பலனைப் பெறுவார்கள். ஜிஎஸ்டி அறிமுகப் படுத்தும்போது இது மேலும் வலு சேர்க்கும்.

சோதனைகள்!

அரசின் இந்த நடவடிக்கையினால் மணிக் கணக்கில் காத்திருந்து, தங்களது பணத்தை எடுக்க சாமானிய மனிதன் சிரமப்பட்டது, 2,000 ரூபாய்க்கு சில்லறை மாற்ற முடியாமல் தடுமாறியது போன்ற பிரச்னைகள் இருந்தாலும் அவை தற்காலிகமானவை என்றுதான் சொல்ல வேண்டும்.

வங்கிப் பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, உடனடி பணப் பரிமாற்ற சேவை (Immediate Payment Service - IMPS), மொபைல் பரிவர்த்தனை போன்றவைகளுக்கான சேவைக் கட்டணத்தைக் குறைக்க புதிய வழிமுறைகள் கட்டாயம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். மேலும், இணைய வழி வங்கி உபயோகம் பாதுகாப்பானதாக இருந்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

வேலைவாய்ப்புக்காக நகரங்களை நோக்கி வந்த பலரும், தினப்படி செலவுக்குத் தேவையான பணம்கூட கிடைக்காததால், மீண்டும் தங்களது கிராமங்களுக்கே சென்றுவிட்டனர். இவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்தி, தொழிலுக்கு கொண்டுவர சிறிது காலம் எடுக்கும். நாட்டின் மொத்த பொருள் உற்பத்தியில் (GDP) 1.5% வரை சற்று தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. சிறு, குறுந் தொழிலில் ஈடுபட்டவர்கள் எல்லா வகையிலும் தாக்குப் பிடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளின் குறைபாடுகள்!

ஐம்பது நாட்களாக வங்கிகளில் மிகச் சிறப்பான பணி செய்யப்பட்டு இருந்தாலும், சில குறைபாடுகள் இருக்கவே செய்தன. ரிசர்வ் வங்கி, தனியார் வங்கிகளுக்கு அதிக அளவு ரொக்கம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. மேலும், தனியார் வங்கிகளின் மூலம்தான்  லஞ்சம் கொடுத்து கோடிக் கணக்கில் பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகள் மாற்றப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்தன. இதற்கான காரணங்களை ரிசர்வ் வங்கி இதுவரை சொல்லவில்லை. பிரதமர் மோடி இந்தப் பிரமாதமான முடிவை தைரியமாக எடுத்திருந்தாலும், ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் போன்ற மற்ற அமைப்புகள்  சரியாக இதனைச் செயல்படுத்தாததால், அருமையான திட்டத்தில் ஒரு கறுப்புப் புள்ளி போல காணப்படுகிறது. இதுவரை பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டுள்ள பணம் எவ்வளவு டெபாசிட் செய்யப் பட்டுள்ளது என்பது குறித்தும் சரியான தகவல் இல்லை என்பது இந்த அரசு மற்றும் ஆர்பிஐ மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கும் விதமாகவே உள்ளது.

கறுப்புப் பணம் என்பது ரொக்கம் மட்டுமல்லாமல், அசையா சொத்துகளான நிலம், கட்டடம் போன்றவையும், தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் மற்றும் பங்குச் சந்தையில் உள்ள கறுப்புப் பணமும் அடங்கும். தற்போது அரசு குறி வைத்திருக்கும் பண மதிப்பு நீக்கத்தில் ரொக்கம் மட்டுமே அடங்கும். எனவே, அடுத்து நிலம், தங்கம், பங்குச் சந்தையில் ‘பி-நோட்ஸ்’ (P-Notes) போன்றவற்றின் மீது அடுத்தடுத்து நடவடிக்கை பாயக்கூடும் என்று நம்பலாம்.


அரசாங்கம் எதிர்பார்த்தது என்ன?


பண மதிப்பு நீக்கத்தை நடைமுறைப்படுத்தியவுடன், மக்கள் தங்களிடம் இருக்கும் 500, 1,000 ரூபாயை வங்கியில் செலுத்துவதைத் தவிர, வேறு எந்த வழியும் இருக்காது என்று நம்பிவிட்டது மத்திய அரசாங்கம். எனவே, வங்கியில் செலுத்தியபின் வருமான வரி இலாகா மூலம் கறுப்புப் பணத்துக்கான வரியை வசூல் செய்துகொள்ளலாம் என்று திட்டமிட்டனர். ஆனால், வங்கிகளில் உள்ள குறைபாடுகள் மூலம் பழைய நோட்டுகளை மாற்ற முடியும் என்பதில் கவனம் செலுத்தவில்லை. வங்கியில் இருந்து ரூ.2,000 எடுக்கவே, மணிக்கணக்கில் பொது மக்கள் காத்திருந்த நிலையில், கோடி கோடியாகக் கட்டுக்கட்டுக்காக 2,000 ரூபாய் புது நோட்டுகள் சென்றது எப்படி என்ற விவரம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து, அதன் அடிப்படையில் சிலரை கைதும் செய்து வருகிறது. இது வங்கி செயல்பாடுகளில் காணப்பட்ட மிகப் பெரிய தோல்வி ஆகும்.

துன்பமில்லாமல் இன்பமில்லை!

அரசின் இந்த அதிரடித் திட்டத்தைப் பொறுத்தவரை, நாம் சற்றே பொறுமையுடன் இருக்க வேண்டிய நேரம் இது. உலக அளவில் வாங்கும் திறனில் (Purchase Parity) மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியா போன்ற பெரிய நாடுகளில் எந்த புது முயற்சியும் சில அசெளகரியங்களையும் சிரமங்களையும் தாண்டித்தான் வெற்றி பெற முடியும் என்பதை நாம் புரிந்துகொண்டே ஆகவேண்டும்.

கணக்கில் காட்டாத பணத்துக்கு எவ்வளவு வரி? 

வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுடைய வரி எவ்வளவு என்பதைப் பார்ப்போம். தற்போது தாமாக வருமானம் அறிவிக்கும் திட்டம் 2-ன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட பணத்துக்கு 49.90% வரியையும், மீதமுள்ள 25% மத்திய அரசின் பி.எம்.ஜி.கே.ஒய் (PMGKY) என்கிற திட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு வட்டி இல்லாமல் டெபாசிட் செய்வதன் மூலம் எந்தவிதமான தண்டனையும் இல்லாமல் தப்பிக்கலாம். இதுவே நடப்பு ஆண்டுக்கான வருமானமாக அதைக் காண்பித்து, அதற்கான அட்வான்ஸ் வரி கட்டும்பட்சத்தில் வருமான வரி இலாகா, 77.25% வரியை அபராதமாக வசூலிக்கும். இதற்கு அட்வான்ஸ் வரி கட்டாமல் தாமாகவே சமர்ப்பிக்கும் வருமானத்துக்கு 83.25 சதவிகிதமாக  வசூலிக்கப்படும். இதுவே வருமான வரி இலாகா அதிகாரிகள் தேடிக்  கண்டுபிடித்தால் வரி, வட்டி, அபராதம் போன்றவை சேர்ந்து 137.22 சதவிகிதமாக வசூலிக்கப்படும். இதுதவிர, சிறைத் தண்டனையும் உண்டு.

இவ்வளவு வரி கட்டுவதற்குப் பதிலாக கமிஷன் மூலம் பணத்தை மாற்றியவர்களை வருமான வரி இலாகா தேடிப் பிடித்து, அவர்களிடம் கணக்கில் வராத வகையில் ரொக்கம் ரூ.2,000 நோட்டுக்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு வருமான வரி இலாகாவின் நடவடிக்கை மட்டுமல்லாமல், சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு (ED) ஆகியவற்றின் நடவடிக்கைகளும் அவர்கள் மேல் பாயும். இவர்கள் உடனடியாக கைது செய்யப்படும் அபாயமும் உண்டு.
பயன் தராத வருமான அறிவிப்பு இரண்டாவது திட்டம்!

கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை தங்களது கணக்கில் காண்பிக்காத பணத்துக்கு 45% வரி செலுத்தி கணக்கை சரிசெய்ய வாய்ப்பளித்தது மத்திய அரசு. சுமார் ரூ.65,000 கோடி அளவில் கணக்கில் காண்பிக்காத பணத்துக்கு வரி செலுத்தி, பல்லாயிரக் கணக்கான மக்கள் சரிசெய்து கொண்டனர். சில நாட்களுக்குமுன் அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி வரி, ஸர்சார்ஜ் மற்றும் அபராதமாக 49.9% செலுத்த வேண்டும். மேலும், கணக்கில்  காண்பிக்காத பணத்தில் 25 சதவிகிதத்தை நான்கு ஆண்டுகளுக்கு வட்டியில்லா பி.எம்.ஜி.கே.ஒய்  என்கிற பிரதம மந்திரி நலத் திட்டத்தில் டொபசிட் செய்ய வேண்டும். இந்தத் திட்டம் குறித்து நவம்பர் 8-ம் தேதி அன்றே அரசு அறிவித்திருந்தால், வரி கட்டி சரிசெய்யும் வாய்ப்பை பலரும் பெற்றிப்பார்கள். இதனால் அரசுக்கு இன்னும் கொஞ்சம் அதிக வருமானம் கிடைத்திருக்கும்.


Author CA G Karthikeyan FCA can be reached at karthikeyan.auditor@gmail.com.

This post first appeared in Nanayam Vikatan dated 08-01-2017 ( https://goo.gl/Fj629Z )