Monday 10 November 2014

Black Money List - Problem in revealing names

கறுப்புப் பணப் பட்டியல்... வெளியிடுவதில் என்ன சிக்கல்?
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

இதோ வருகிறது, அதோ வருகிறது என பல ஆண்டுகளாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த கறுப்புப் பணம், இனி எப்போது வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்கு சிக்கலான சூழல் உருவாகியுள்ளது.  

 ரகசியமாக பணத்தைப் பதுக்கி வைப்பதில் ‘சொர்க்க பூமி’யாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பல்வேறு நாட்டினர் பல ஆண்டுகாலமாக பணத்தைப் பதுக்கி வைக்கின்றனர். இதில் பெரும்பான்மையான பணம் வரி கட்டாத மற்றும் கணக்கில் வராத பணம் ஆகும். 2011-ம் ஆண்டு ஜெனிவா நாட்டைச் சேர்ந்த ஹெச்எஸ்பிசி வங்கி ஊழியர் ஒருவர் தனது வங்கியின் வாடிக்கையாளர் பட்டியலை திருட்டுத்தனமாக எடுத்து வெளியிட, அது சர்வதேச அளவில்  பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதன்பின், ‘வெளிநாட்டில் இந்தியர்கள் வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும்' என்கிற பேச்சு அதிகம் எழத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக, ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் உள்ள சுமார் 70,000 கோடி ரூபாயை பதவியேற்ற 100 நாட்களுக்குள் மீட்டு வருவோம்’’ என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் சொல்ல, இதனைத்  தொடர்ந்து மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதன் அடிப்படை யில் மத்திய அரசு 627 பெயர்களை மூடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தது. இதனை, வருவாய் செயலர், ரிசர்வ் வங்கி துணை கவர்னர், சிபிஐ இயக்குநர் ஆகியோரை உள்ளடக்கிய 13 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வு குழுவிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது.

கறுப்புப் பணம் வைத்திருப்பவரின் பட்டியல்தான் கிடைத்துவிட்டதே. இனி, அதை வெளியிட வேண்டியது தானே என்றால், அதில்தான் நடைமுறை மற்றும் சட்டச் சிக்கல்கள் உள்ளன. இதுபோன்ற விவரங்களை வெளியிட சில விதிமுறைகள் உள்ளன. இரு நாடுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான விதிமுறை களில் ரகசிய ஒப்பந்த விதிமுறை இருந்து வருகிறது. இது நாட்டுக்கு நாடு வேறுபடும். மேலும், வரிவிதிப்புக்கான இரட்டை வரித் தவிர்ப்பு ஒப்பந்தமும் நாட்டுக்கு நாடு வேறுபடும்.

பொதுவாக, இரு நாடுகளுக்கு இடையேயான ரகசிய ஒப்பந்தத்தில் உள்ள முக்கியமான விஷயம், ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு அளிக்கும் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்பதும், இப்படி பெறப்படும் தகவல்களால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதபடிக்கு பாதுகாப்பாக வைத்திருக்கப்படும் என்பதே. 

தற்போது அரசு வெளியிட்டிருக்கும் பட்டியல் வெளிநாட்டில் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியல் மட்டும்தான். இவர்களின் கணக்கில் இருக்கும் அத்தனை பணத்தை யும் கறுப்புப் பணம் என்று கூறிவிட முடியாது. இதில் உள்ள நபர்கள் ஒருவேளை அந்த பணத்துக்கு வரி கட்டி டெபாசிட் செய்திருந்தாலோ அல்லது வெளிநாடுவாழ் இந்தியர்களாக இருந்து அந்த நாட்டில் சம்பாதித்தப் பணத்தை வெளிநாட்டு வங்கியில் டெபாசிட் செய்திருந்தாலோ அவர்கள் மீது குற்றம்சாட்ட முடியாது. அதைக் கறுப்புப் பணம் என்றே கூற முடியாது.

வெளிநாட்டு வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் எப்படி வந்தது என்பது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விரிவான விசாரணைக்குப்பின் தெரியவரும். இந்த  விசாரணையின் முடிவில் தரப்படும் அறிக்கையை வைத்தே கறுப்புப் பணம் மீட்பு பற்றிய நடவடிக்கைகள் தெரிய வரும். 
சர்வதேச நிதி ஒழுங்கமைப்பு (Global Financial Integrity) அறிக்கை, “சட்ட விரோதமாக நிதி புழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளது” என்று கூறுகிறது.


பலவகைகளில் இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்ற துடிக்கும் தற்போதைய அரசு இதற்கான முழு முனைப்பில் ஈடுபட்டால் மட்டுமே  வரி செலுத்தாமல் வெளிநாடுகளில் தேக்கிவைத்திருக்கும் பணத்தை நம் நாட்டுக்கு கொண்டுவந்து பல முக்கிய மக்கள் நலத் திட்டங்களைச் செய்ய முடியும்.