சங்கரமணி இந்தியாவின் பிரபலமான மருந்துக் கம்பெனியின் துணைத் தலைவராக பணிபுரிபவர். கம்பீரமான தோற்றமும், கண்ணியமான பேச்சும், வாய் நிறைய சிரிப்பும் என பார்த்த்தும் ஈர்க்கும் குணமுடையவர். தனது கடின உழைப்பின் மூலம் தன் கம்பெனியின் உச்சிக்கு வந்தவர்.
பல ஆண்டுகளாக அவருடன் தங்கிவந்த அவருடைய அம்மாவிற்கு திடீரென “கேன்சர்” நோய் இருப்பதாக கண்டறிந்த டாக்டர் குழு அந்த நோய் சற்று முற்றிய நிலையில் இருப்பதாகவும் சங்கரமணியிடம் கூறினர். மருந்துக் கம்பெனியின் மூத்த பதவியில் இருந்ததால் உடனடியாக பெங்களூரில் உள்ள தலை சிறந்த டாக்டரிடம் காண்பிக்க முடிந்தது. நல்ல சிகிச்சை சில மாதங்கள் கொடுத்தாலும் நோயின் தீவிரத் தன்மை குறையாததால் சில டாக்டர்கள் அமெரிக்காவில் இதற்கு சிறப்பு சிகிச்சை இருப்பதாகக் கூறினர்.
ஆனால், அதற்கான செலவும் அதிகம் என்பதை தெரிவித்தனர். உடனடியாக அமெரிக்கா செல்ல வசதியும் மனமும் இருந்தாலும், இதற்கான செலவை வெளிநாட்டில் செய்வதற்கான வரி மற்றும் இதர அனுமதிகள் குறித்த கேள்விகள் சங்கரமணியின் மனதில் எழுந்தன..
வெளிநாட்டில் ஒரு இந்தியக் குடிமகன் எவ்வளவு மருத்துவச் செலவு செய்யலாம்?
ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கப்பட்ட முறையில் (LRS), ஒரு நிதி ஆண்டில் மருத்துவச் செலவுக்காக ஒரு தனி நபர் 2,50,000 டாலர் வரை செலவு செய்ய முடியும். நோயாளியுடன் செல்லும் உதவியாளரும் ஒரு நிதி ஆண்டில் 2,50,000 டாலர் செலவுக்காக எடுத்துச் செல்ல முடியும்.
தீர விசாரித்துப் பார்த்த்தில், தாயின் மொத்த மருத்துவ செலவு 6,00,000 டாலருக்கு மேல் ஆகும் என்று தெரிய வந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றத்தில் தன் வங்கியை தொடர்பு கொண்டார் சங்கரமணி. பேங்க் மேனேஜர் முதலில் சங்கரமணியை அமைதிபடுத்தினார். அவர் சற்று சாந்தமடைந்ததும் வங்கியின் நடைமுறைகளை விவரிக்கத் தொடங்கினார்.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட டீலர் (authorized dealer) நோயாளி பதிவு செய்த படிவம் 2ஏ (Form A2) வை மட்டும் ஒப்புக்கொண்டு 2,50,000 டாலர் வரை அந்நிய செலாவனியை வெளியீடு செய்ய முடியும். 2,50,000 டாலருக்குள் செலவு இருக்கும்பட்சத்தில் மருத்துவரின் சான்றிதழ் தேவை இல்லை என்றார்.
படிவம் 2ஏ என்றால் என்ன?
படிவம் 2ஏ என்பது சாதாரண பணம் செலுத்தும் படிவங்களைப் போன்ற மற்றோர் படிவமே. இந்திய ரூபாயை அந்நியச் செலாவணியாக மாற்றிப்பெற இந்தப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அந்நியச் செலாவணிக்காக விண்ணப்பிப்பவரின் விபரம், அவருடைய கணக்கு எண், மாற்றப்பட வேண்டிய நாணயம், மாற்றுவதற்கான காரணம், பணத்தை பெறப்போகும் நபரின் அல்லது நிறுவனத்தின் விபரம் ஆகியவற்றை அளிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட டீலர் (authorized dealer) அதை சரிபார்த்து திருப்தி அடைந்த பின் 2,50,000 டாலர் வரை அந்நிய செலாவணியை வெளியீடு செய்வார். இந்த பரிவர்த்தனையில் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவை இல்லை.
ஆனால் எனக்கு 6,00,000 டாலருக்கு மேல் தேவைப்படுகிறதே. எங்கிருந்து என்ன அனுமதி வாங்க வேண்டும் என்று கூறுங்கள். என்னால் இனிமேலும் தாமதிக்க முடியாது என்றார் பொறுமை இழந்த சங்கரமணி. ஒன்றும் பிரச்சனை இல்லை சார். அதற்குத்தான் நாங்கள் இருக்கிறோமே. பெரிய நடைமுறை சிக்கல்களின்றி சுலபமாகவே நீங்கள் கேட்கும் அளவிற்கு அந்நிய செலாவனியை வெளியீடு செய்ய முடியும் என்றார்.
2,50,000 டாலருக்கு மேல் செலவானால் என்ன செய்வது?
2,50,000 டாலருக்கு மேல் செலவாகுமெனில் படிவம் 2ஏ உடன் அயல்நாட்டில் சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் / நிறுவனத்தின் செலவுச் சான்றிதழும் தேவைப்படும். அதோடு மட்டுமின்றி அங்கீகரிக்கப்பட்ட டீலர் ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெற வேண்டும். ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற பின், 2,50,000 டாலருக்கு மேலும் அந்நிய செலாவணியை வெளியீடு செய்ய முடியும். அதாவது விண்ணப்பதாரர் சிகிச்சை செலவுச் சான்றிதழையும், பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 2ஏ படிவத்தையும் மட்டும் வங்கியில் வழங்கினால் போதுமானது.
இதை கேட்டபின்தான் சங்கரமணிக்கு சற்று ஆறுதலாக இருந்தது. விரைவாக பணத்திற்கு ஏற்பாடு செய்து தன் அம்மாவுடன் அமெரிக்காவிற்குப் பறந்தார். மகன் தனக்காக இவ்வளவு மெனெக்கிட்டதிலேயே அவருக்கு பாதி நோய் குணமடைந்து விட்டது, சீக்கிரமே தான் பூரண குணமடைந்து விட முடியும் என்ற நம்பிக்கையுடன் விமானத்தில் ஏறினார் சங்கரமணியின் அன்னை.
(இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.)
No comments:
Post a Comment