20 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்தில் தனது வேலையை துவங்கிய லட்சுமி நரசிம்மன் தனது குடியுரிமையை அங்கேயே மாற்றிக் கொண்டார். பளீரென்ற நகரமும் உயர்ந்த வேலை கொடுத்த சம்பளமும் அவரை கவர்ந்ததோடு இல்லாமல் அவர் மகள்களையும் கவர்ந்தது. அதன்படி அங்கேயே படித்து செட்டில் ஆகிவிடலாம் என்று அவர்கள் முடிவெடுத்ததால் குடும்பத்தினர் அனைவரும் ஆஸ்திரேலியாவிலேயே குடியுரிமை பெற்றுவிட்டார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா வந்து செல்லும் நரசிம்மனுக்கு 50 வயதை தாண்டியதும் இந்தியாவிலேயே வந்து தங்கிவிடலாமா என்ற யோசனை சமீப காலமாக தலைதூக்கி நிற்கிறது. வீட்டில் மனைவியும் உறவினர்களை பார்க்கும் ஆர்வம் அதிகரித்து வந்ததால் இந்தியா வந்துவிடவேண்டும் என்று அடிக்கடி கூறி வந்தார்.
நரசிம்மன் கிராமத்தில் வளர்ந்ததால் ஆரம்பம் முதலேயே பண்னை வீடு ஒன்றை வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏராளமான தரகர்களை தொடர்பு கொண்டு விலை நிலவரம் குறித்து தகவல் சேகரித்து வந்தார். அடிக்கடி படப்பிடிப்புகள் நடக்கும் பொள்ளாச்சி அருகே பச்சைபசேல் என்ற பூமியோடு சகாய விலையில் ஒரு பண்ணை வீடு இருப்பதை அறிந்து அதை வாங்க முடிவு செய்தார். ஏறத்தாழ வாங்கியே விடலாம் என்று பணத்திற்கு ஏற்பாடு செய்யும் வேளையில், அவரது நணபர் ராம்ஜீ குடியாளர் அல்லாதவர்கள் விவசாய நிலம், பண்ணை வீடு வாங்குவதில் பல அடிப்படை சிக்கல்கள் இருப்பதாக கூறினார். இதனைப் பற்றி விவரங்களை அறிய ஆடிட்டரை அணுகினார் நரசிம்மன்.
ஒரு குடியாளருக்கு எந்த விதமான சொத்தையும் வாங்க விற்க உரிமை உண்டு. ஆனால் என்ஆர்ஐகளுக்கும் வெளிநாட்டவருக்கும் பெமா (FEMA) சட்ட்த்தில் நிறையவே கட்டுப்பாடுகள் உள்ளன. பொதுவாக விவசாய நிலங்களையோ பண்ணை வீடுகளையோ வாங்கஎன்ஆர்ஐIகளுக்கு அனுமதி இல்லை. இது சம்பந்தப்பட்ட பல கேள்விகளை அடுக்க தொடங்கினார் நரசிம்மன்.
1. பொது அனுமதி உள்ள சொத்துகள் யாவை?
விடை: பொது அனுமதி என்பது எந்த தடையும் இன்றி யார் வேண்டுமானாலும் வாங்க கூடிய சொத்துகளுக்குரியது. அதன்படி விவசாய நிலம், பண்ணை வீடு, தோட்டங்களை தவிர மற்ற எல்லா சொத்துகளுக்கும் பொது அனுமதி உள்ளது.
2. சொத்துகளை வாங்கிய பிறகு ஏதேனும் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டுமா?
விடை: சொத்துப் பத்திரத்தை தம் பெயரில் பதிவு செய்வதைத் தவிர வேறு எந்த ஆவணங்களுக்கும் தாக்கல் செய்ய தேவையில்லை.
3. ஒருவர் தன் பெயரில் எத்தனை சொத்துகள் வாங்க முடியும்?
விடை: சொத்துகளின் எண்ணிக்கைக்கோ, மதிப்பிற்க்கோ ரிசர்வ் வங்கி (RBI) இதுவரை எந்த ஒரு வரையறையும் விதிக்கவில்லை.
4. விவசாய நிலத்தை மற்றவர்களிடமிருந்து பரிசாக வாங்கலாமா?
விடை: விவசாய நிலங்கள், பண்ணை, தோட்டம் இவை எதையுமே ரிசர்வ் வங்கியின் சிறப்பு அனுமதியின்றி எந்த முறையிலும் சொந்தமாக்கிக் கொள்ள முடியாது.
5. சரி, விவசாய நிலமின்றி மற்ற சொத்துகளை எப்படி வாங்குவது?
விடை: என்ஆர்ஐக்கள் மற்றும் இந்திய மூதாதையர்கள் (PIO) வெளிநாட்டு வங்கிகளிலிருந்து இந்திய வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பலாம். எக்காரணம் கொண்டும் அந்நிய செலவாணியிலோ, பயணிகள் காசோலை வழியாகவோ பணம் செலுத்த கூடாது.
6. வாங்கிய சொத்தினை வாடகைக்கு விட முடியுமா?
விடை: வாடகைக்கு விடுவதில் எந்த சிக்கலும் இல்லை. எனினும், வரும் வாடகைக்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டும்.
7. என்ஆர்ஐகளும், பிஐஓகளுக்கும் வீட்டுக்கடன் பெற முடியுமா?
விடை: பல வங்கிகள் இந்தியாவில் என்ஆர்ஐ, பிஐஓகளுக்கு 80% வரை கடன் அளிக்க தயாராக இருக்கின்றன.
இதை கேட்டறிந்த நரசிம்மன் சற்றே ஏமாற்றத்துடன் வீட்டு மனை வாங்குவதற்கான வேலைகளை துவங்கினார். என்னதான் இருந்தாலும் பண்ணை வீட்டைப் போல வராது தான். ஆனால் என்ன செய்வது என்று மனைவியிடம் புலம்பிக் கொண்டார்.
No comments:
Post a Comment