Tuesday 31 May 2016

பட்ஜெட் எதிர்பார்த்ததும், கிடைத்ததும்

பட்ஜெட்டுக்கு முன்னால் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வு அறிக்கை, நாட்டின் பொருளாதார நிலை குறித்த தகவல்களை தருவதுடன், பட்ஜெட்டுக்கு ஒரு முன்னோட்டத்தை அறிவிக்கும் விதமாகவும் இருக்கும். ரூபாய் 1 லட்சம் கோடி மானியத்தில், பெரும்பான்மையான தொகை வசதி படைத்த பணக்காரர்களுக்குத்தான் சென்று அடைகிறது மற்றும் 7வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த சுமார் ரூபாய் 1.2 லட்சம் கோடி அளவில் தேவைப்படுகிறது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த பட்ஜெட்டில் 9 தூண்கள் என்று விவசாயம், ஊரகத்துறை, சமூக நலத் துறை, கல்வித் துறை, கட்டமைப்பு, நிதித் துறை சீர்திருத்தம், எளிதாக வர்த்தகம் புரிதல், வரி சீர்திருத்தங்கள் என்று பிரித்து ஒவ்வொரு துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி வரம்பு உயர்த்தப்படும் என்று ஏராளமானவர்கள் எதிர்பார்த்த நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வருமான வரிப் பிரிவு 87ஏ யின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சத்துக்கும் குறைந்த வருமானம் உள்ளோருக்கு கூடுதலாக ரூ.3,000 மட்டும் வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.

நிதி அமைச்சரின் சிரமம் புரிகிறது. இந்திய மக்கள் தொகையான 125 கோடியில் சுமார் 5% மட்டுமே வரி செலுத்துவதாக உள்ள நிலையில் வரி வரம்பை உயர்த்த முன் வரவில்லை.

உத்தேச வரி

சிறு மற்றும் நடுத்தர தொழில் புரிவோருக்கு உதவும் வகையில் வருமான வரிப்பிரிவு 44ADன் படி 2 கோடி ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்பவர்கள் கணக்கு புத்தகம் ஏதும் பராமரிக்கப்பட வேண்டியதில்லை. உத்தேச வரியாக விற்பனையில் 8% லாபமாக காண்பித்து அதற்கான வரியை செலுத்தினால் போதுமானது. அதேபோல புரபஷனல்ஸ் என்று சொல்லக்கூடிய மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் போன்றோர் தங்களது மொத்த வருமானம் ரூ.50 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் உத்தேச வருமானமாக 50%-ஐ காண்பித்து அதற்கான வரியை செலுத்தினால் போதுமானது. கணக்கு புத்தகம் ஏதும் பராமரிக்கப்பட வேண்டியதில்லை. இந்த வரம்பிற்கு கீழ் லாபம் காட்டினால் கட்டாய தணிக்கை செய்ய வேண்டும்.

நிறுவன வரி (Corporate Tax)

வரும் ஆண்டுகளில் மானியங்கள் குறைக்கப்பட்டு வரி விகிதமும் குறைக்கப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்து இருந்தது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செலவுக்கணக்கில் முழு சராசரி (weighted average) யாக, நிதியாண்டு 2016-17 க்கு 150% ஆகவும் 2017-18 க்கு 100% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. துரிதத் தேய்மானம் காற்றாலை (windmill) போன்ற சில இயந்திரங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த துரிதத் தேய்மானம் (Accelerated Depreciation) 2017 ஏப்ரல் 01 லிருந்து அதிகபட்சமாக 40% ஆக மட்டுமே அனுமதிக்கப்படும். 2020 மார்ச் 31 வரை நிறுவப்படும் சிறப்பு ஏற்றுமதி மண்டல (SEZ) தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

புதிதாக அதாவது 01.03.16 க்கு பிறகு உற்பத்தி செய்ய நிறுவப்படும் நிறுவனங்களுக்கு வருமான வரி 25% குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் துரிதத் தேய்மானம் மற்றும் முதலீட்டு சலுகைகள் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த ஆண்டிலிருந்து ரூபாய் 5 கோடிக்கு மிகாமல் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வருமான வரிவிகிதம் 29% குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்களுக்கு வரி மற்றும் கூடுதல் வரியும் பொருந்தும்.

ஸ்டார்ட்அப் (Start-up) நிறுவனங்கள்
புதிய தொழிலதிபர்களை உருவாக்குவதில் முனைப்பு கொண்டிருக்கும் இந்த அரசு 2016 ஏப்ரல் 01 முதல் 2019 மார்ச் 31 வரை நிறுவப்படும் நிறுவனங்களுக்கு, அதாவது 5 ஆண்டுகளில் முதல் 3 ஆண்டுகள் 100% லாபத்திலிருந்து விலக்கு கொடுக்க வகை செய்துள்ளது. ஆனால் இந்த நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச மாற்று வரி பொருந்தும் (minimum alternative tax).

பட்டியலிடப்படாத (Unlisted) நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும்போது ஏற்படும் லாபத்திற்கான நீண்டகால மூலதன ஆதாயம் 3 ஆண்டிலிருந்து 2 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. வியாபாரத்தை எளிதில் துவங்கும் வகையில் நிறுவனங்கள் ஒரே நாளில் பதிவு செய்ய கம்பெனி சட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

கருப்புப்பணம்

தாமாக முன்வந்து கணக்கில் காண்பிக்காத பணத்தை 45% வரி மற்றும் உபரித் தொகையாக செலுத்தும் பட்சத்தில் எந்தவித கேள்வியும் அபராதமும் சிறை தண்டணையும் இல்லாமல் ஏற்று கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். இத்திட்டம் 01.06.15 முதல் 30.09.16 வரை நடைமுறையில் இருக்கும். இந்த திட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் இதனை அதிகம் பேர் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு.

டிவிடெண்ட் விநியோக வரி
பட்டியலிடப்படாத (Unlisted) நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கு கொடுக்கப்படும் டிவிடெண்ட் தொகைக்கு டிவிடெண்ட் விநியோக வரி (Dividend Distribution Tax) நிறுவனம் கட்ட வேண்டும். அதில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி அளிக்கப்படும் டிவிடண்ட் தொகை ரூ.10 லட்சத்திற்கு அதிகமாகும் பட்சத்தில் இதை பெறும் பங்குதாரர்கள் 10% வரி கட்ட வேண்டும். இந்த மாற்றத்தால் பங்கு சந்தையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

வரி சீர்திருத்தங்கள்

வருமான வரி கட்டுபவர்களுக்கான நடைமுறைகளை சுலபமாக்கும் வகையில் இமெயில் மூலமாக கேள்விகள் கேட்கப்பட்டு வருமான வரிக் கணக்கை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்தியாவில் 7 பெரு நகரங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.

வருமான வரி அதிகாரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, அபராத தொகையாக காண்பிக்கப்படாத வருமானத்திற்கான வரியாக 100% லிருந்து 300 % வரை விதிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

தற்போது இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தங்களது வருமானத்தை குறைவாக காண்பிக்கும்பட்சத்தில் அபராத தொகை 50% ஆகவும், வருமானத்தை உண்மைக்கு மாறாக தவறாக காண்பிக்கப்படும் பட்சத்தில் அபராதமாக 200% ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பில் ஈடுபடுவோருக்கு இது பலத்த அடியாக இருக்கும்.

வருமான வரி மேல் முறையீட்டுக்கு செல்பவர்களுக்கு சில சாதகமான நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரித் தொகையில் 15% கட்டினால் மேல் முறையீடு முடியும் வரை நிறுத்திவைக்க (Stay) கொடுக்க வரி அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பேசப்பட்டது வோடாபோன் நிறுவன வருமான வரி வழக்கு. இந்த வழக்கிற்கு பிறகு வருமான வரிச்சட்டத்தில் வரிப்பிரிவு 9-ல் கொண்டு வரப்பட்ட மாற்றம் பழைய ஆண்டுகளுக்கும் பொருந்தும் என்று கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த பட்ஜெட்டில் பழைய ஆண்டுகளுக்கான சட்டத்தில் கணக்கை மறுபரிசீலனை செய்தால் வருவாய் செயலர் தலைமையில் உள்ள உயர்நிலை கமிட்டியின் ஒப்புதலுக்குப் பின் தான் செய்ய முடியும் என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் வெகு ஜனங்களுக்கும், கீழேயுள்ள நடுத்தர மக்களுக்கும் ஏற்ற வகையில் தாக்கல் செய்யபட்டுள்ளது. 9 தூண்களுக்கான திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.
karthikeyan.auditor@gmail.com

No comments:

Post a Comment