Tuesday, 31 May 2016

வரி ஏய்ப்பு: மொரிஷியஸின் பிடி இறுகுகிறதா?

இந்தியாவுக்கும் மொரிஷியஸுக் கும் இடையேயான 30 ஆண்டு காலமாக இருந்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்பார்த்து வந்த இந்த மாற்றம் கடந்த வாரத்தில் நடந்திருக்கிறது. என்ன மாற்றம் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு வரி சொர்க்க நாடுகள் என்றால் என்ன என்று பார்த்துவிடலாம்.

வரி சொர்க்க நாடுகள்

வருமான வரி எந்த நாட்டில் மிகக் குறைவாகவோ அல்லது வரியே இல்லாமல் இருக்கிறதோ அந்த நாடுகள் வரி சொர்க்க நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக மொரிஷியஸ், கேமன் ஐலன்டு, பஹாமா, சைப்ரஸ், பனாமா போன்ற நாடுகள் வரி சொர்க்க நாடுகளாக கருதப்படுகின்றன. வரி சொர்க்க நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் முதலீட்டின் டிவிடென்டுக்கான வரி (Dividend Tax) மற்றும் பங்குகள் விற்கும் போது ஏற்படும் நீண்ட கால மூலதன லாபத்திற்கும் (Capital Gain) வரி செலுத்தத் தேவை இல்லை.


இந்தச் சலுகையைப் பயன்படுத்த வளர்ந்த நாடுகள் தங்களது முதலீட்டை இந்த வரி சொர்க்க நாடுகள் மூலமாக வளரும் நாடுகளில் முதலீடு செய்கின்றன. உதாரணமாக அமெரிக்க முதலீட்டாளர் இந்தியாவின் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்யும் பட்சத்தில், இந்தப் பங்குகளுக்கான டிவிடெண்ட் அல்லது மூலதன லாபம் (Capital Gain) பெறும்போது அது வருமான வரிக்கு உட்பட்டது. ஆனால் மொரிஷியஸ் நாட்டில் உள்ள நிறுவனம் மூலம் இங்கு முதலீடு செய்து, அதன் மூலம் பெறப்படும் டிவிடென்ட் மற்றும் நீண்ட கால மூலதன லாபத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

மொரிஷியஸ் நாட்டில் மூலதன லாப வரி மற்றும் டிவிடென்டிற்கான வரி ஏதும் இல்லை. இதற்காக இந்தியாவும் மொரிஷியஸும் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. 30 ஆண்டுகாலமாக இருக்கும் இந்த ஒப்பந்தத்தை சிலர் வரி துஷ்பிரயோகம் செய்வதாக வருமான வரித் துறையினர் கூறி வருகின்றனர். இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளோ அல்லது சில தொழில் அதிபர்களோ தங்களது கணக்கில் செலுத்தாத அல்லது வருமான வரி செலுத்தாத பணத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று மீண்டும் மொரிஷியஸ் நாட்டில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து, அந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வது நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத்தான் சுழற்சி முதலீடு (Round Tripping) என்று சொல்லுவார்கள்.

இதை சரி செய்யும் விதமாக தற்போது இந்தியாவிற்கும் மொரிஷியஸ் நாட்டிற்கும் உள்ள இரட்டை வரித் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை செய்துள்ளனர். இதுவரை மொரிஷியஸில் உள்ள நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் செய்யப்படும் முதலீட்டிற்கான மூலதன லாப வரி இதுவரை செலுத்த வேண்டியதில்லை என்று இருந்தது. தற்போது இந்த லாபத்திற்கும் வரி செலுத்த வேண்டும் என்ற நிலை வந்துள்ளது.

அதாவது, 01.04.2017-க்கு பிறகு மொரிஷியஸ் மூலமாக இந்தியாவுக்கு வரும் முதலீட்டுக்கு கிடைக்கும் லாபத்துக்கு வரி செலுத்த வேண்டும். இது சாதாரணமாகக் கட்டப்படும் வரியில் 50% வரி செலுத்த வேண்டும். அதாவது தற்போது 15% மூலதன லாப வரி (Capital Gains tax) என்று வைத்துக் கொண்டால் அதில் 50% (7.5%) ஆக வரி கட்ட வேண்டும். 2019 ற்கு பிறகு இதற்கான முழு வரியையும் செலுத்த வேண்டும்.

மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்

இந்த மாற்றத்தால் மொரிஷியஸ் நாட்டில் இருந்து இந்தியாவில் முதலீடு செய்யப்படும் அந்நிய நேரடி முதலீட்டின் பங்குகளை விற்கும் பட்சத்தில் இந்தியாவில் வரி செலுத்தப்பட வேண்டும். 2019-ம் ஆண்டு வரை இந்தியாவின் பங்குச் சந்தையும் வளர்ச்சியும் ஆரோக்கியமானதாக இருக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இந்தச் சூழ்நிலையில் ஈட்டக்கூடிய லாபத்திற்கு 7.5% வரி செலுத்துவது என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய வரிச் செலவாக இருக்காது.

அதாவது வோடஃபோன் போன்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரி ஓர் எதிர்பாராத சுமையாகக் கருதப்பட்டு அந்நிய நிறுவனங்களுக்கு ஒரு நிரந்தரமற்ற நிலை ஏற்பட்டது. தற்போது மொரிஷியஸ் நாட்டின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கான வரிச்செலவு குறித்து ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் அதிக அளவு வரிச் சச்சரவுகளை (disputes) அரசாங்கம் குறைக்க வாய்ப்பாக இருக்கும்.

மேலும் இந்தச் சட்டத்தில் “Grand Fathering Provisions” படி இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே செய்யப்பட்ட பரிவர்த்தனை (Transactions) அதற்கான வரிச்சட்டத்தில் மாற்றம் ஏதும் இருக்காது.

மூதாதைய விதிமுறைகள் (Grand Fathering’s)

முப்பது ஆண்டுகளாக இருந்த ஒப்பந்தத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதால் பல குழப்பங்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. அதனால் இந்த ஒப்பந்த மாற்றம் 01-04-2017 க்கு பிறகு செய்யப்படும் முதலீடுகளுக்குத்தான் பொருந்தும். இதற்கு முந்தைய தேதியில் செய்யப்பட்டிருக்கும் முதலீடுகளுக்கு பழைய விதிமுறைகளே பொருந்தும். இதைத்தான் மூதாதைய விதிப் பொருத்தம் (Grandfather Provisions) என்று கூறுவார்கள்.

சமீப காலமாக சிங்கப்பூர் வழியாக அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வருகின்றன. ஆகையால் சிங்கப்பூர் நாட்டிற்கும் இந்த இரட்டை வரித் தவிர்ப்பு ஒப்பந்த மாற்றம் கொண்டு வரப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. ஆனால் சிங்கப்பூருக்கு கொண்டு வரப்படும் ஒப்பந்த மாற்றத்தில் மொரிஷியஸ் நாட்டிற்கு செய்யப்பட்ட மூதாதைய விதிமுறைகள் போல இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுபோல இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள மற்ற நாடுகளிலும் விதிகளில் மாற்றம் வருமா என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த ஐந்தாண்டுகளில் இந்திய நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள நேரடி முதலீட்டில் 61 சதவீதத்துக்கு மேல் மொரிஷியஸ் நாட்டின் மூலம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலமாக ஒப்பந்த துஷ்பிரயோகம் (‘Treaty Abuse’) மற்றும் சுழற்சி முதலீடு (‘round tripping’) முறை மூலம் இந்தியாவில் வரி செலுத்தாத பணம் மொரிஷியஸ் நாட்டு முதலீடு மூலம் இந்தியாவிற்குள் மீண்டும் கொண்டு வருவதாக அதிக அளவில் பேசப்பட்டது.

இந்த ஒப்பந்த மாற்றத்தின் மூலம் இந்தியாவில் வரி சம்பந்தமான கொள்கைகள் எதிர்பார்க்கக் கூடியதாகவும் அறுதியிடபட்டவையாகவும் இருக்கும் என்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பகத் தன்மையை கொடுக்கவும் வாய்ப்பாக அமையும். அந்த வகையில் மொரி ஷியஸ் நாட்டு இரட்டை வரி ஒப்பந்த மாற்றம் குறைந்தகால அவகாசத்தில் வரிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு இந்தியா மீதான நம்பிக்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிகம் இருக்கும் என்று நம்பலாம்.
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
karthikeyan.auditor@gmail.com

No comments:

Post a Comment