Monday, 29 February 2016

பட்ஜெட் - 2016 நிதித் துறையில் எதிர்பார்க்கப்படும் தனிநபர் வரிச் சலுகைகள்!

‘‘சொந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாலும் வரிச் சலுகை வேண்டும்!’’

ஆடிட்டர். ஜி. கார்த்திகேயன், கோவை.

‘‘வீட்டுக் கடனுக்கான வட்டி தற்போது வீட்டுக் கடன்  மூலம் வாங்கிய  வீட்டில் வசித்தால் ரூ.2 லட்சம் வரையிலும், அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை மொத்த வருமானத்தில் இருந்து கழித்து வரிச் சலுகை பெறலாம்.
இனி, வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டில் குடியிருந்தாலும் வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும். 

வீட்டைக் கடன் வாங்கி கட்டினால் அல்லது வாங்கினால் கட்டுமானக் காலத்தில் வட்டியை தற்போது வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை. 

உதாரணமாக, ஒரு ஃப்ளாட் ஒன்றுக்கு முன்பணம் கொடுத்து பதிவு செய்து அந்த ஃப்ளாட் கட்டப்படும் நிலையில் அதற்காக கொடுக்கப்படும் வட்டி வருமானத்தில் இருந்து கழிக்கப்பட அனுமதிக்கப்படு வதில்லை. அந்த ஃப்ளாட் கட்டி முடித்தபின் அதில் குடிபுகுந்த பின்னரே அனுமதிக்கப் படுகிறது. 

இது ஃப்ளாட் புக் செய்தபின் வாங்கிய கடனுக்காகக் கொடுக்கப்படும் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும். வீட்டு விற்பனை மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய வருமான வரி சம்பந்தப்பட்ட ஊக்கங்கள் உத்வேகத்தைக் 
கொடுக்கும்.  

நீண்ட கால மூலதன ஆதாயத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போதும் வரிச் சலுகை வழங்க வேண்டும். இதனால் பங்குச் சந்தை மற்றும் சேமிப்பும் முன்னேற்றமடையும். 

வருமான வரி செலுத்துவோருக்கு கொடுக்கப்படும் வரிக்கான ரீஃபண்ட் உடனடியாக கொடுக்கப்படுவதில்லை என்பது பொது மக்களின் கருத்து. இதற்குக் காரணம், வரிப் பிடித்தம் (TDS) அதிகமாக இருப்பது. ஆகவே, சில வகை பரிவர்த்தனைகளுக்கான 
டிடிஎஸ் தொகையைக் குறைக்கலாம்.’’

Tuesday, 16 February 2016

Budget 2016-17 - What should the Central Government do?

2016-17 ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?

ஆடிட்டர். ஜி. கார்த்திகேயன், கோவை
 
'' வீட்டுக் கடனுக்கான வட்டி தற்போது, வீட்டில் வசித்தால் இருந்தால் ரூ. 2 லட்சம் வரையிலும்,  வாடகைக்கு விட்டிருந்தால்  வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை மொத்த வருமானத்தில் இருந்து கழித்து வரிச் சலுகை பெறலாம். வீட்டில் குடியிருந்தாலும் வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும்.  வீட்டை கடன் வாங்கி கட்டினால், அல்லது வாங்கினால் கட்டுமானக் காலத்தில் வட்டியை தற்போது வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
 
உதாரணமாக ஒரு ஃப்ளாட் ஒன்றுக்கு முன்பணம் கொடுத்து பதிவு செய்து அந்த ஃப்ளாட் கட்டப்படும் நிலையில் அதற்காக கொடுக்கப்படும் வட்டி வருமானத்தில் இருந்து கழிக்கப்பட அனுமதிக்கப்படுவதில்லை. அந்த ஃப்ளாட் கட்டி முடித்த பின் அதில் குடி புகுந்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது.  இது ஃப்ளாட் புக் செய்தபின் வாங்கிய கடனுக்காகக் கொடுக்கப்படும் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும். வீட்டு விற்பனை மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய வருமான வரி சம்பந்தப்பட்ட ஊக்கங்கள் உத்வேகத்தைக் கொடுக்கும்.

மூலதன ஆதாய வரி:
  
நீண்டகால மூலதன ஆதாயத்தை (Long Term Capital Gain) வருமான வரிச் சட்டப் பிரிவு  [ 54,  54 (f)- ன் படி ஒரு வீட்டில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு சொத்தை விற்பதன் மூலம் ஏற்படும் வரி கட்டுவது தவிர்க்கப்படுகிறது.  அதேபோல  நீண்ட கால மூலதன ஆதாயத்தை  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போதும் வரிச் சலுகை வழங்க வேண்டும். இதனால் பங்குச் சந்தை மற்றும் சேமிப்பும் முன்னேற்றமடையும். 
 
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வருமான வரி வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அனைவரும் அதிகமாக எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் கடந்த ஆண்டு ரூ. 50,000 தான் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு வருமான வரி வரம்பு சற்றே உயரலாம் என்று எதிர்ப்பார்க்கலாம். 
 
“மேக் இன் இந்தியா” என்பது இந்த அரசின் முக்கிய கொள்கை. இந்தத் திட்டத்தில் ஈடுபடுவோருக்கு வரிச் சலுகைகள், அதிக தேய்மானம் மற்றும் இதர சலுகைகளை வழங்கும்பட்சத்தில் இந்த புதிய மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெற வாய்ப்பாக இருக்கும். . 
 
வருமான வரி செலுத்துவோருக்கு கொடுக்கப்படும் வரிக்கான ரீஃபண்ட் உடனடியாக கொடுக்கப்படுவதில்லை என்பது பொது மக்களின் கருத்து. இதற்குக் காரணம் வரிப் பிடித்தம் (TDS) அதிகமாக இருப்பது. ஆகவே சில வகை பரிவர்த்தனைகளுக்கான டிடிஎஸ் தொகையைக் குறைக்கலாம்.'' என்றார்.

Swachh Bharath, CSR and Start Up

The Swachh Bharat Abhiyan or the “Clean India” campaign is also an opportunity for start-ups and Corporates.

The idea behind the movement is to gradually stop open defecation and control the diseases caused by it. It offers myriad opportunities for start-up business and for fulfilment of social responsibility objectives of corporates.

A majority of the Indian population has mobile phones but they do not have access to toilets – and that is a telling fact. Hygiene takes a back seat in rural as well as urban India, especially among the low income groups.

Here is how this campaign is an opportunity – the cost of constructing a toilet is estimated to be Rs. 20,000. Of this, the central government will subsidise Rs.4,000 and the State and local bodies will provide subsidy of Rs. 2,000 each.

That means the actual cost incurred by the individual is Rs. 12,000.
Construction start-ups who do not have heavy capital to invest can use this opportunity to start construction projects on smaller scale.

Funding can be obtained easily as overall costs are much less compared to standard construction projects and these provide a solid base for small start-ups to expand prudently without singeing their hands in large investment/capital heavy projects. This provides great opportunity to those who aspire to be entrepreneurs.

Corporates in India are duty bound to spend two per cent of their profits in social responsibility projects. This should be implemented under the Companies Act 2013. Section 135 of the Companies Act provides the threshold limit for applicability of the CSR to a Company i.e. (a) net worth of the company to be Rs 500 crore or more; (b) turnover of the company to be Rs. 1,000 crore or more; (c) net profit of the company to be Rs 5 crore or more.

Further as per the CSR Rules, the provisions of CSR are not only applicable to Indian companies, but also applicable to branch and project offices of a foreign company in India. Every qualifying company requires spending of at least two per cent of its average net profit for the immediately preceding three financial years on CSR activities.

From construction to fulfilling corporate social responsibility objectives, the Swachh Bharat Abhiyan is an opportunity.

While constructing toilets across India has gathered momentum, with nearly 95 lakh toilets being built in a year, usage levels are still low.

The north east seems to have done the best with usage being 100 per cent, but elsewhere toilet usage remains at   46 per cent to 50 per cent. Perhaps, it would be a good idea for corporates to also undertake hygiene education as part of CSR activities so that the effort of building toilets is not wasted.
India has long wilted under the scourge of public defecation.

It is a matter of shame on the world stage that a country of technology experts still has open defecation. The public and the private sector are now geared to meet this challenge and make India healthier and cleaner in every sense.

G. Karthikeyan
(The author is a Coimbatore-based chartered accountant)

Abroad Study Expenses - How much does RBI allow?

வெளிநாட்டுப் படிப்புச் செலவுக்கு எவ்வளவு அனுப்ப ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது?

ஆடிட்டர் ஜீ.கார்த்திகேயன்  பன்னாட்டு வரி ஆலோசகர், கோவை
தீப்தி மாதவன் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். தனது இன்ஜினீயரிங் பட்டப்படிப்பை பெங்களூரில் உள்ள முன்னணி கல்லூரியில் சமீபத்தில் படித்து முடித்தார். அவரது தந்தையின் தொழிற்சாலையில் சேர்வதா அல்லது வேறு ஏதாவது பன்னாட்டு கம்பெனியில் சில காலம் வேலை செய்ய வைக்கலாமா என்று வீட்டில் அனைவரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். தீப்தி கர்நாடக சங்கீதத்தில் அதிக ஆர்வமுடையவர். சிறுவயது முதலே ஏராளமான கச்சேரிகளையும் செய்து வந்தவர். ஆறு வயது இருக்கும் போதே, அவரது மாமாவின் கர்நாடக இசை ஞானத்தால் கவரப்பட்டு தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தவர். தனது படிப்புடன் தொடர்ந்து சங்கீதத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த தீப்தி தனது இன்ஜினீயரிங் படிப்பை முடித்தவுடன் தடாலடியாக தனது பெற்றோர்களிடம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இசைக் கல்லூரியில் சேர்வதாகக் கூறினார். பட்டப் படிப்பிற்கும் மேல் படிப்பிற்கும் சம்பந்தம் இல்லாததால் பெற்றோர்கள் ஷீலாவும் மாதவனும் நீண்ட யோசனைக்குப் பின் ஒத்துக் கொண்டார்கள்.

ஹாலிவுட் நகரில் அமைந்த இசைக் கல்லூரியானதால் அங்கு இடம் கிடைப்பது கஷ்டமான விஷயம். ஆனால் தீப்தியின் இசை ஆர்வத்தாலும் அவரது மாமாவின் சங்கீதத்தில் அதிகப் பிரசித்தி பெற்று பலரையும் தெரிந்திருந்ததால் அமெரிக்க இசைக்கல்லூரியில் அட்மிஷன் சிரமமில்லாமல் கிடைத்து விட்டது. இப்போது அமெரிக்கா செல்ல தீப்தி தயார்.

கல்லூரிக் கட்டணம், தங்கும் வீடு, மற்ற செலவுகள் அந்நியச்செலாவணியில் செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கி எவ்வளவு அனுமதிக்கிறது என்று ஆராயத் தொடங்கினார் மாதவன்.

உத்தேசமாக ஆண்டுக்கு 60,000 டாலர் வரை செலவாகும் என்று கணக்கிட்டார். இந்தத் தொகையை வங்கி மூலம் மாதந்தோறும் அனுப்பலாம் என்று முடிவு செய்தார். இதற்கு முன் அனுமதி ஏதேனும் தேவையா?
ஆண்டிற்கு 1,00,000 டாலர் வரை படிப்பு செலவு மற்றும் பராமரிப்பு செலவுக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப  ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. இத்தொகையை விட கூடுதலாகத் தேவைப்பட்டால் வெளிநாட்டுப் பல்கலைகழகத்தின் உத்தேச மதிப்புப்படி (Estimate)  அந்நியச்செலாவணியை வெளிநாடு அனுப்ப ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது. மேல் படிப்பிற்காக பணம்  அனுப்ப எளிமையான படிவம் (FORM) A-2 ஐ தாக்கல் செய்ய வேண்டும்.  இது தவிர வேறு எந்தப் படிவமும் வேண்டியதில்லை.  வெளிநாடு செல்லும் மாணவரது வங்கிக் கணக்கில் இருந்து இந்தத் தொகையை அனுப்ப முடியும். வங்கிக்கடன் முலமாக பெறப்பட்டத் தொகையையும் அனுப்பலாம்.
உறவினர்கள் இந்தத் தொகையை அனுப்ப முடியுமா?

நெருங்கிய உறவினர்களும் படிப்பு மற்றும் பராமரிப்புச் செலவை அனுப்ப முடியும். நெருங்கிய உறவினர்கள் எனப்படுபவர்கள் கீழ்க்கண்டவர்கள் அடங்குவர்.
 ·    ஒரே இந்துக் கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர்
 ·    கணவன் மற்றும் மனைவி
 ·    பெற்றோர்
 ·    பிள்ளைகள்
 ·    மருமகன் மற்றும் மருமகள்
 ·    சகோதர சகோதரியர் மற்றும் அவர்களுடைய துணைவியர்
 ·    தாத்தா மற்றும் பாட்டி
 ·    பேரன் மற்றும் பேத்தி

மேலும் மாணவரது பெயரில் உள்ள Resident Foreign Currency Account அல்லது Exporter Earnings Foreign Currency Accounts ல் இருந்தால் எந்தவித  அதிக வரம்பும் இல்லாமல் வெளிநாட்டுக்கு அனுப்ப முடியும்.
தாராளமாக மேல்நாட்டுப் படிப்புக்காக ரிசர்வ் வங்கியின் விதிகளால் அமெரிக்காவுக்கு தீப்தியை அனுப்ப அவரது பெற்றோர்கள் மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்கள். இசைத்துறையில் வித்தியாசமான ஒரு புதிய அனுபவத்தை பெறத் துடித்துக் கொண்டிருந்த தீப்தி கூடிய விரைவில் அடிக்கடி டிஸ்னிலேண்ட் மற்றும் யுனிவர்சல் ஸ்டூடியோவைப் பார்க்கலாம் என்ற கனவில் திளைக்க ஆரம்பித்தார்.

Saturday, 31 October 2015

Do you have to pay additional tax in the US?

கும்பகோணத்தைச் சேர்ந்த கார்த்தி கணேசன் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பன்னாட்டு சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஆர்டர் மேனேஜ்மென்ட்  தலைவர் (Order Management Head) ஆக பணி புரிந்து வந்தார். 
சிங்கப்பூர், துபாய், குவைத் என்று உலகமெல்லாம் பறந்து வந்தவர் பன்னாட்டு நடைமுறைகள், போட்டி மனப்பான்மை, புது தொழில்நுட்பங்களை தழுவிக்கொள்ளும் வேகம் ஆகியவற்றை பார்த்து வியந்து போனார். ஏற்கனவே படு சூட்டிப்பாக துறுதுறுவென சொன்னதையெல்லாம் புரிந்து  கொள்ளும் தன் 6 வயது மகன் ப்ரணவ் இதையெல்லம் பார்த்து வளர்ந்தால் மேலும் மெருகேறிவிடுவான் என்று முழுமையாக நம்பினார்.

தானும் அமெரிக்காவில் இடமாற்றம் பெற்றுக்கொண்டு அங்கேயே செட்டில ஆகிவிடலாம் என்றதும், எங்கிருந்தாலும் மற்ற எதை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம், தமிழ் கலாச்சாரமும், பழக்கவழக்கங்களும் இங்கு இருந்தால்தான் தன் மகன் கற்க முடியும் என்று போர்க் கொடி உயர்த்தினார் அவர் மனைவி நீரஜா. சரி ஒரிரு வருடங்கள் மட்டும் அங்கே இருந்து அவன் படிக்கட்டும் பிறகு திரும்ப வந்துவிடலாம் என்று கார்த்தி வெள்ளைக்கொடியைப் பறக்க விட்டதும் போர் ஓய்ந்த்து. 
மூவரும் அமெரிக்கா கிளம்ப ஆயத்தமாயினர். அரிசோனா மாகாணத்தில் இருக்கும் சிறந்த பள்ளியில் மகனை சேர்த்தார். அவருக்கு எஸ்எஸ்என் (SSN) கிடைத்துவிட்டது. மனைவிக்கும் மகனுக்கும் ஐஐஐபி டிபென்டென்ட் விசா (H1B Dependent VISA) இருந்ததால் எஸ்எஸ்என் பெற முடியவில்லை. மனைவி வேலைக்குச் செல்லாததாலும், மகன் பள்ளிக்குச் செல்ல ஐஐஐபி மட்டும் போதுமென்பதாலும் அதை பற்றி அவர் கவலைப்படவில்லை.

ஒரு வருடம் சென்றதே தெரியாமல் அழகாக கடந்து போனது. டாக்டர் மனைவி ஒரு முக்கிய பயிற்சிக்காக 2 மாதம் இந்தியா சென்றுவிட்டார்.  வரிப்படிவங்களை சமர்பிக்க தன் கம்பெனியின் சிபிஏ (CPA) -ஐ அணுகினார். அவர் அமெரிக்காவில் வரிப்படிவங்களில் வரிதாரின் மனைவியடன் (அவருக்கு வருமானம் இல்லாத பட்சத்திலும்) இணைந்து வரித்தாக்கல் செய்யும் சாத்தியம் உள்ளது. அதோடு மட்டும் இல்லாமல் தன்னைச் சார்த்து இருப்பவர்களையும் வரிப்படிவங்களில் குறிப்பிடலாம்.

அதற்காக குறிப்பிட்டத் தொகையை வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ள முடியும். இது அனைத்தும் வரிதாரர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களாகக் குறிப்பிடப்படுவோர் அமெரிக்காவில் ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள வரி ஆண்டில் குறைந்தது 183 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். வரிதாரரின் துணைவருக்கு 183 நாட்கள் இருக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை. அவரை குடியாளராக கருத ஒரு உறுதி ஆவணம் சமர்பித்தால் போதுமானது. ஆனால் அவர் வேறு நாடுகளில் வரிக்குட்படுத்தப்படும் போது அவ்விரு நாடுகளின் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தை பொருத்து இந்த விதி வேறுபடும்.

வரிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள இருவருக்கும் சோசியல் செக்யூரிட்டி நம்பர் (Social Security Number) அல்லது தனி நபர் வரி குறிப்பீட்டு எண்- (ஐடிஐஎன் - Individual Taxpayer Identification Number ITIN) கட்டாயமாக இருக்க வேண்டும். இரண்டுமே இல்லாதபட்சத்தில் வரிப்படிவத்தோடு ஐடிஐஎன் விண்ணப்பத்தையும் உடன் அனுப்ப வேண்டும் என்றார். வரிதாரரைச் சார்ந்தவர்களாகக் குறிப்பிடப்படுவோருக்கும் ஐடிஐஎன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஐடிஐஎன் என்றால் என்ன ?

ஐடிஐஎன் என்பது அமெரிக்காவின் வரித் துறை (Internal Revenue Service) வழங்கும் ஒரு 9 இலக்க வரிதாரர் அடையாள எண்ணாகும். வரித்தாக்கலைத் தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் ஐடிஐஎன் ஒரு அடையாள எண்ணாகப் பயன்படாது. எஸ்எஸ்என் வாங்க தகுதி பெறாத ஆனால் வரித்தாக்கல் செய்ய தேவைப்படும் அனைவருக்கும் அவருடைய குடிவரவு அந்தஸ்த்தைக் கணக்கில் கொள்ளாமல் ஐடிஐஎன் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

ஐடிஐஎன் விண்ணப்பம் டபிள்யூ -7 (W-7) என்ற படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்படுகிறது. டபிள்யூ -7 படிவத்தில் விண்ணப்பதாரரின் அடையாளங்களாக சமர்பிக்கப்படும் ஆவணங்களின் எண்களும், வரிதாரரின் எஸ்எஸ்என் எண்ணும், அவருக்கும் விண்ணப்பதார்ருக்கும் உள்ள தொடர்பு போன்ற விவரங்கள் இருக்கும். விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை வரிப்படிவங்களுடன் இணைத்து, ஆவணச் சான்றுகளுடன் ஐஆர் எஸ் (IRS) இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ, நேரில் சென்றோ சமர்பிக்கலாம். ஒப்புக்கொள்ளப்படும் ஆவணங்களில் பாஸ்போர்ட் மட்டுமே எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துவிடும்.

மற்ற ஆவணங்கள் குடிவரவு அந்தஸ்த்து அல்லது அடையாளம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவு செய்ய மட்டுமே பயன்படும். அவ்வாறு 13 ஆவணங்கள் உள்ளன. அனைத்து ஆவணங்களும் அசலாகவோ அல்லது சான்றளிக்கப்பட்ட நகல்களாகவோ மட்டுமே ஒப்புக்கொள்ளப்படும்.  

பொதுவாக, அமெரிக்காவின் வரித் துறை ஐடிஐஎன் விண்ணப்பங்களை அங்கீகரிக்க 4 முதல் 6 வாரங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. ஐடிஐஎன் உறுதியான பின்னர் தான் வரிப்படிவங்கள் மதிப்பீடு செய்யப்படும்.                   
இதனைக் கேட்டறிந்த கார்த்தி தன் மனைவி ஐடிஐஎன் விண்ணப்பிக்க அசல் ஆவணங்களை இந்தியாவிலிருந்து அனுப்பிவைப்பது பாதுகாப்பானது இல்லையே என்று கவலைக் கொண்டார். ஆனால் அவருடைய சிபிஏ (CPA), ஐடிஐஎன் விண்ணப்பங்களை சரிபார்த்து ஆவணங்களை உறுதி செய்ய அக்செப்டன்ஸ் ஏஜென்ட்ஸ் (Acceptance Agents) இந்தியாவிலேயே இருப்பதாகக் கூறினார். அக்செப்டன்ஸ் ஏஜென்ட்ஸ் என்பவர்கள் ஐஆர்எஸ் (IRS) ஆல் அனுமதிக்கப்பட்ட முகவர்கள். ஆவணங்களை சரிபார்த்து
சர்டிஃபிகேட் ஆஃப் அக்கூரசி (Certificate of Accuracy) என்ற படிவத்தை ஐஆர்எஸ் (IRS) க்கு அனுப்பி வைப்பர். அதை ஆதாரமாகக் கொண்டு ஐடிஐஎன் அங்கீகரிக்கப்படும் என்றதும் சற்று நிம்மதி கொண்டு வரித்தாக்கல் செய்யும் வேலையில் இறங்கினார்.

 (இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். )      

Tuesday, 27 October 2015

Do you want to stay for long in the US?

திருச்சி பழூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் சென்னையில் ஒரு மிகப் பெரிய கப்பல் கம்பெனியின் கணக்குத் துறையில் நல்ல நிலையில் பணிபுரிந்து வருகிறார். எந்த ஒரு கேள்விக்கும் தெளிவாக பதிலளிப்பார். சாப்பாட்டு பிரியரான அவர்  அனைவரையும் பெயர் தெரியாத பல ருசியான உணவகங்களுக்கு கூட்டிச் செல்வார். கிண்டலும் கேலியுமாக தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் வேலையையும் தேன் உறியும் வண்டு போல் வாங்கிக் கொள்வார். அவருக்கடியில் பணிபுரிவதே ஒரு ஜாலியான அனுபவம் என்பது அலுவலகமே அறிந்த செய்தி.

அவருக்கு கீழ் பணிபுரிபவர்கள் அவரை “கே.கே.” என்று செல்லமாக அழைத்தனர். ஒரு வேலை பயிற்சிக்காக அமெரிக்காவிலிருந்து பயிற்சியாளர்கள் வந்தனர். அங்கே அவர் நுண்ணறிவையும் நிர்வாகத் திறனையும் கண்டு வியந்த அமெரிக்காவின் மூத்த மேலாளர் அவரை அமெரிக்கவிலேயே பணியமர்த்தக் கோரி ஒரு இமெயிலைத் தட்டினார். இரண்டு வருடத்திற்கு அமெரிக்காவில் பணிபுரிய சென்று பிடித்திருந்தால் அங்கேயே தொடரும் வாய்ப்பு கொடுத்ததும் சரி என்று தலையசைத்தார் கே.கே. 
புதிய விஷயங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே உள்ள அவர் வரி சம்பந்தமான விஷயங்களை முதலில் அறிந்து கொள்ள விரும்பினார். தன் சிஏ மனைவி ராதிகாவிடம் அடிப்படையான சில தகவல்களை தெரிந்து கொண்டார். அதாவது, அமெரிக்காவில் இந்தியாவைப் போல் இல்லாமல் கணவன் மனைவி இணைந்து வரி தாக்கல் செய்யும் வசதி உள்ளது. அதாவது வரிதாரரின் விருப்பப்படி தனியாகவோ அல்லது துணைவருடன் இணைந்தோ (துணைவருக்கு வருமானம் இல்லாவிட்டலும்) வரி தாக்கல் செய்யலாம்.  வரிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள இருவருக்கும் சோசியல் செக்யூரிட்டி நம்பர் (எஸ்எஸ்என் SSN - Social Security Number) அல்லது இன்டிவியூவல் டேக்ஸ்பேயர் ஐடென்டிஃபிகேஷன் நம்பர் (Individual Taxpayer Identification Number (ITIN)) கட்டாயமாக இருக்க வேண்டும். ITIN இல்லாதபட்சத்தில் வரிப்படிவத்தோடு ITIN விண்ணப்பத்தையும் உடன் அனுப்ப வேண்டும் என்றார். சோசியல் செக்யூரிட்டி நம்பர்-ஐப் பற்றி ஒரு அளவுக்கு தெரிந்து வைத்திருந்தார் கே.கே ஆனால் அதை எப்படிப் பெருவது, முழுமையாக அதன் நடைமுறை என்ன என்பது பற்றி எல்லாம் விசாரித்தார்.  
  
சோசியல் செக்யூரிட்டி நம்பர் என்றால் என்ன?

சோசியல் செக்யூரிட்டி நம்பர் என்பது அமெரிக்காவில் ஒரு நபரை அடையாளம் காண பயன்படுத்தப்படும் ஒரு ஒன்பது இலக்க எண். ஆரம்பத்தில் ஒரு நபரை அடையாளம் கண்டு சமூக பாதுகாப்பு வரி வரம்புக்குள் அவரை கொண்டு வரும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது என்றாலும், அதன் பயன்பாடு இப்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

சோசியல் செக்யூரிட்டி நம்பர் வகைகள்

சோசியல் செக்யூரிட்டி ஏஜென்சி (SSA) எனப்படும் அரசாங்க நிறுவனமே இந்த எண்களை வெளியிடுகிறது. சமூக பாதுகாப்பு அட்டைகள் மூன்று வெவ்வேறு வகையாக வழங்கப்படுகிறது. மிகவும் பொதுவான வகை, அட்டை வைத்திருப்பவரின் பெயர் மற்றும் எண் கொண்டு வரும். இத்தகைய அட்டைகள் அமெரிக்க குடிமக்கள் மற்றும் அமெரிக்க நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டது போக சமூக பாதுகாப்பு அட்டைகள் இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட வகையில் உள்ளன:

1) “வேலைவாய்ப்பு செல்லுபடியாகாது” (Not Valid For Employment )என்ற வார்த்தைகளை கொண்டு வரும் இத்தகைய சோசியல் செக்யூரிட்டி நம்பர் அட்டைகள் வைத்திருக்கும் நபர் அமெரிக்காவில் பணிபுரிய அங்கீகாரம் இல்லை எனக் குறிப்பிடுபவை.

2) Valid for work only with DHS authorization - இத்தகைய சோசியல் செக்யூரிட்டி நம்பர் அட்டைகள் வைத்திருக்கும் நபர் அமெரிக்காவில் பணிபுரிய ஹோம்லேன்ட் செக்யூரிட்டி துறை (Department of Homeland Security) துறையினர் அங்கீகாரத்துடன் மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும். இந்த அட்டைகள் அமெரிக்க தற்காலிகப் பணி அங்கீகாரம் கொண்ட மக்களுக்கு வழங்கப்படுகின்றன. 

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

பொதுவாக அமெரிக்காவில் பணிபுரிய அங்கீகாரம் பெற்ற நபர்கள் மட்டுமே எஸ்எஸ்என் பெற விண்ணப்பிக்க முடியும். https://www.ssa.gov/forms/ss-5.pdf என்ற இணையதள இணைப்பில் SSN-கான விண்ணப்பம் உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து Social security Officeல் சமர்பிக்க வேண்டும் அல்லது தபால் அனுப்ப வேண்டும். https://secure.ssa.gov/apps6z/FOLO/fo001.jsp என்ற இணையதள இணைப்பில் எந்த அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தோடு குறிப்பிட்ட சில ஆவணங்களையும் இணைக்க வேண்டும். குடிவரவு அந்தஸ்து, வயது, அடையாளம் மற்றும் வேலைத்தகுதிக்கான அசல் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

1) குடிவரவு அந்தஸ்து மற்றும் அடையாளத்திற்கு ஆதாரமாக ஒப்புக்கொள்ளப்படுவன:
a)    Form I-551(Immigrant VISA) மற்றும் பாஸ்போர்ட் (அல்லது)
b)    I- 766 எனப்படும் Work permit (ஆல்லது)
c)    I-94 எனப்படும் வரவு மற்றும் வெளியேற்றத்தின் பதிவு
2) வயதிற்கான அதாரமாக ஒப்புக்கொள்ளப்படுவன:
a)    பிறப்புச் சான்றிதழ்
b)    பாஸ்போர்ட்
c)    DHS கொடுத்த சான்றிதழ்

12 வயதிற்கு மேல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் நேர்முகத்தேர்விற்குப் பின்னர் தான் SSN வழங்கப்படும். பொதுவாக ஒரே நாளில் எஸ்எஸ்என் அங்கீகரிக்கப்பட்டுவிடும். 2 வாரங்களில் அசல் எஸ்எஸ்என் அட்டை வழங்கப்படும்.

“பரவாயில்லையே! இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாயே!” என்று மனைவியை சீண்டினார். ITINஐ பற்றி அடுத்த இதழில் காண்போம்.

http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=11062

Wednesday, 21 October 2015

Can indian resident family members of an NRI pay out loan taken in India?

சத்யநாராயணன் ஈரோட்டைச் சேர்ந்த சிறந்த வக்கீல் குடும்பத்தில் பிறந்தவர். வாழையடி வாழையாய் வக்கீல் தொழில் செய்யும் வீட்டு பெரியவர்களை பார்த்து வளர்ந்ததால் சிறு வயது முதலே கருப்புக் கோட்டின் மீது மோகம் கொண்டார். படிப்பில் படு கெட்டியாக இருந்தவர் தன் வீட்டு வரவேற்பு அறையின் சுவர் முழுவதும் சான்றிதழும், மடல்களுமாக அடுக்கி வைத்திருந்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் LSATல் நல்ல மதிப்பெண் பெற்று மேற்படிப்புக்காக காலிபோனியாவில் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். குடும்பத்தில் அனைவருக்கும் சந்தோஷம் மடை கடந்தோடியது. ஸ்டான்போர்டின் பிரம்மாண்டமும் அங்கு படிக்க வரும் மாணவர்களின் சூட்டிப்பும் சத்யாவை மலைக்க வைத்தது. எப்படியாவது நன்கு படித்து தேர்ந்து விட வேண்டும் என்ற முனைப்போடு படித்துத் தேர்ச்சி பெற்றார். 
இந்தியா திரும்ப வந்த அவர் குடும்ப நண்பர் மூலம் வக்கீல் ஒருவரை சந்திக்க நேர்ந்த்து. நாளடைவில் அவர் ஒரு சிறந்த நண்பரானார். சத்யாவுடைய  வழிகாட்டியாகவும் நலம் விரும்பியாகவும் இருந்த அவர், படிப்பை இதோடு நிறுத்திவிடாமல் மேலும் படி, ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் மேலும் மூன்று வருடம் படித்தால் அமெரிக்காவின் தலை சிறந்த சட்ட நிறுவனங்களில் சுலபமாக வேலை கிடைக்கும். வாழ்க்கை தரமே வேறு நிலைக்கு போய் விடும் என்றார்.

அவர் கூறும்போதே சத்தாவின் மனத்திரையில் “பீஸ்ட்” காரின் கதவை வேலையாள் திறந்து விட மிடுக்காக தான் இறங்கும் காட்சி ஓடியது. ஹார்வார்டில் மேலே படிக்க குறைந்தது 85,000 டாலர் செலவாகும் என்றதும் சத்யாவிற்கு சற்று யோசனையாக இருந்தது. தன் பெயரில் இந்தியாவிலேயே கடன் எடுத்து விடலாம் என முடிவு செய்தார். என்னதான் படிக்கும் காலத்தில் பகுதி நேர வேலைக்குச் சென்றாலும் அவ்வளவு பெரிய தொகையை தன் பெயரில் கடனாக பெற்று எப்படி திருப்பி அடைப்பது என்று அம்மாவிடம் புலம்பினார். அப்பாவிடமிருந்து அடுத்த நாளே போன் வந்தது. என்னடா புதுசா காசு பணமெல்லாம் பார்க்கிறாய்? ஒரு டிகிரி படித்ததுமே கொம்பு முளைத்துவிட்டதோ? கடனை நான் அடைக்கிறேன். ஒழுங்கா படிக்கும் வேலையை மட்டும் பார்” என்று செல்லமாக கடிந்தார். ஆனால் ஒரு என்ஆர்ஐ வாங்கிய கடனை அவருடைய நெருங்கிய சொந்தங்கள் அடைக்க முடியுமா? அவ்வாறு அடைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என்று வக்கீல் மூளை யோசிக்கத் துவங்கியது. வீடு முழுவதும் அடுக்கி வைத்திருந்த குண்டு குண்டு புத்தகங்களில் ஃபெமா (FEMA) வை எடுத்தார். 
ஒரு என்ஆர்ஐ இந்தியாவில் வாங்கிய கடனை இந்தியாவில்தான் அடைக்க முடியும். தன் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளிலிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பியோ அல்லது தன் என் ஆர் ஓ கணக்கிலிருந்து நேரடியாகவோ மட்டுமே கடனை அடைக்க முடியும். அதோடு மட்டுமின்றி ஃபெமா விதிகளின்படி ஒரு என்ஆர்ஐ வாங்கிய கடனை அவருடைய இந்திய வாழ் நெருங்கிய சொந்தங்கள் அடைக்க முடியும். அவ்வாறு செய்வதற்கு முதலில் அங்கீகரிக்கப்பட்ட டீலர் வங்கி யார் கடனை அடைக்கப் போகின்றாரோ அவருடைய பெயரை கேரண்டர் (Guarantor)ஆக பதிவு செய்ய வேண்டும். கடனை கேரண்டார் அவருடைய வங்கிக்கணக்கிலிருந்தே திருப்பி செலுத்த முடியும்.

இங்கே நெருங்கிய சொந்தங்கள் என்பதில் கீழ்கண்டவர்கள் மட்டுமே அடங்குவர்.

 •    ஒரே இந்துக் கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர்
 •    கணவன் மற்றும் மனைவி
 •    பெற்றோர்
 •    பிள்ளைகள் 
 •    மருமகன் மற்றும் மருமகள்
 •    சகோதர சதோதரியர் மற்றும் அவர்களுடைய துணைவியர் 
 •    தாத்தா மற்றும் பாட்டி
 •    பேரன் மற்றும் பேத்தி 

ஒரு என்ஆர்ஐ இந்தியாவில் வாங்கிய கடனை இந்திய வாழ் நபர் அடைக்க மற்றொரு வழி, என்ஆர்ஐ இந்தியாவில் வைத்திருக்கும் என்ஆர்ஓ கணக்கை உபயோகிக்கும் உரிமையை தன் நெருங்கிய சொந்தங்களுக்கு அளிக்க முடியும். அதற்கான “மான்டேட்” விண்ணப்பத்தை வங்கியில் கொடுத்தால் போதுமானது. அவ்வாறு செய்தால் அந்நபர் என்ஆர்ஓ வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கவோ செலுத்தவோ முடியும்.

இதனை தெரிந்துகொண்ட சத்யா மன நிம்மதியுடன் ஹார்வார்டு பல்கலைகழகத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய  துவங்கினார். விண்ணப்பத்தை முடிக்கவே ஒரு நாள் முழுவதும் எடுத்தது. ஆனால் தன் வாழ்வை மாற்றப் போகும் முக்கியமான அடியை எடுத்து வைக்கும் ஆவலும் உற்சாகமும் நிறைந்திருந்ததால் நேரம் கடந்ததே தெரியாமல் தன் எதிர்காலத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

( இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். )