Tuesday 16 February 2016

Abroad Study Expenses - How much does RBI allow?

வெளிநாட்டுப் படிப்புச் செலவுக்கு எவ்வளவு அனுப்ப ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது?

ஆடிட்டர் ஜீ.கார்த்திகேயன்  பன்னாட்டு வரி ஆலோசகர், கோவை
தீப்தி மாதவன் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். தனது இன்ஜினீயரிங் பட்டப்படிப்பை பெங்களூரில் உள்ள முன்னணி கல்லூரியில் சமீபத்தில் படித்து முடித்தார். அவரது தந்தையின் தொழிற்சாலையில் சேர்வதா அல்லது வேறு ஏதாவது பன்னாட்டு கம்பெனியில் சில காலம் வேலை செய்ய வைக்கலாமா என்று வீட்டில் அனைவரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். தீப்தி கர்நாடக சங்கீதத்தில் அதிக ஆர்வமுடையவர். சிறுவயது முதலே ஏராளமான கச்சேரிகளையும் செய்து வந்தவர். ஆறு வயது இருக்கும் போதே, அவரது மாமாவின் கர்நாடக இசை ஞானத்தால் கவரப்பட்டு தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தவர். தனது படிப்புடன் தொடர்ந்து சங்கீதத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த தீப்தி தனது இன்ஜினீயரிங் படிப்பை முடித்தவுடன் தடாலடியாக தனது பெற்றோர்களிடம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இசைக் கல்லூரியில் சேர்வதாகக் கூறினார். பட்டப் படிப்பிற்கும் மேல் படிப்பிற்கும் சம்பந்தம் இல்லாததால் பெற்றோர்கள் ஷீலாவும் மாதவனும் நீண்ட யோசனைக்குப் பின் ஒத்துக் கொண்டார்கள்.

ஹாலிவுட் நகரில் அமைந்த இசைக் கல்லூரியானதால் அங்கு இடம் கிடைப்பது கஷ்டமான விஷயம். ஆனால் தீப்தியின் இசை ஆர்வத்தாலும் அவரது மாமாவின் சங்கீதத்தில் அதிகப் பிரசித்தி பெற்று பலரையும் தெரிந்திருந்ததால் அமெரிக்க இசைக்கல்லூரியில் அட்மிஷன் சிரமமில்லாமல் கிடைத்து விட்டது. இப்போது அமெரிக்கா செல்ல தீப்தி தயார்.

கல்லூரிக் கட்டணம், தங்கும் வீடு, மற்ற செலவுகள் அந்நியச்செலாவணியில் செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கி எவ்வளவு அனுமதிக்கிறது என்று ஆராயத் தொடங்கினார் மாதவன்.

உத்தேசமாக ஆண்டுக்கு 60,000 டாலர் வரை செலவாகும் என்று கணக்கிட்டார். இந்தத் தொகையை வங்கி மூலம் மாதந்தோறும் அனுப்பலாம் என்று முடிவு செய்தார். இதற்கு முன் அனுமதி ஏதேனும் தேவையா?
ஆண்டிற்கு 1,00,000 டாலர் வரை படிப்பு செலவு மற்றும் பராமரிப்பு செலவுக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப  ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. இத்தொகையை விட கூடுதலாகத் தேவைப்பட்டால் வெளிநாட்டுப் பல்கலைகழகத்தின் உத்தேச மதிப்புப்படி (Estimate)  அந்நியச்செலாவணியை வெளிநாடு அனுப்ப ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது. மேல் படிப்பிற்காக பணம்  அனுப்ப எளிமையான படிவம் (FORM) A-2 ஐ தாக்கல் செய்ய வேண்டும்.  இது தவிர வேறு எந்தப் படிவமும் வேண்டியதில்லை.  வெளிநாடு செல்லும் மாணவரது வங்கிக் கணக்கில் இருந்து இந்தத் தொகையை அனுப்ப முடியும். வங்கிக்கடன் முலமாக பெறப்பட்டத் தொகையையும் அனுப்பலாம்.
உறவினர்கள் இந்தத் தொகையை அனுப்ப முடியுமா?

நெருங்கிய உறவினர்களும் படிப்பு மற்றும் பராமரிப்புச் செலவை அனுப்ப முடியும். நெருங்கிய உறவினர்கள் எனப்படுபவர்கள் கீழ்க்கண்டவர்கள் அடங்குவர்.
 ·    ஒரே இந்துக் கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர்
 ·    கணவன் மற்றும் மனைவி
 ·    பெற்றோர்
 ·    பிள்ளைகள்
 ·    மருமகன் மற்றும் மருமகள்
 ·    சகோதர சகோதரியர் மற்றும் அவர்களுடைய துணைவியர்
 ·    தாத்தா மற்றும் பாட்டி
 ·    பேரன் மற்றும் பேத்தி

மேலும் மாணவரது பெயரில் உள்ள Resident Foreign Currency Account அல்லது Exporter Earnings Foreign Currency Accounts ல் இருந்தால் எந்தவித  அதிக வரம்பும் இல்லாமல் வெளிநாட்டுக்கு அனுப்ப முடியும்.
தாராளமாக மேல்நாட்டுப் படிப்புக்காக ரிசர்வ் வங்கியின் விதிகளால் அமெரிக்காவுக்கு தீப்தியை அனுப்ப அவரது பெற்றோர்கள் மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்கள். இசைத்துறையில் வித்தியாசமான ஒரு புதிய அனுபவத்தை பெறத் துடித்துக் கொண்டிருந்த தீப்தி கூடிய விரைவில் அடிக்கடி டிஸ்னிலேண்ட் மற்றும் யுனிவர்சல் ஸ்டூடியோவைப் பார்க்கலாம் என்ற கனவில் திளைக்க ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment