Monday 6 January 2014

Roll-back of taxes - possible?

Article in Nanayam Vikatan dated 29/12/2013 by CA G Karthikeyan FCA:

வருமான வரி ரத்து...
நடைமுறையில் சாத்தியப்படுமா?

வருமான வரி இல்லாத நாடுகளின் வரிசையில் இந்தியா வருமா?

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருமான வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி விதிப்பை ரத்து செய்வோம்' என்று பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி கூறியது வியாபாரிகளிடமும், தொழில்புரிவோர்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் உற்பத்தி வரி, விற்பனை வரி மற்றும் வருமான வரி ஆகியவற்றை ரத்து செய்வது நடைமுறைச் சாத்தியமா என்பது பெரிய கேள்வி. முதலில், குறைந்தபட்சம் வருமான வரியையாவது நம்மால் ரத்து செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்வோம்.
வரி விதிப்பு ஏன்?
வருமான வரி, மத்திய விற்பனை வரி மற்றும் உற்பத்தி வரி ஆகிய மூன்றும் இந்தியாவின் கடந்த ஆண்டு பட்ஜெட் வருவாயில் 50 சதவிகிதத்துக்கும் மேல் திரட்ட வழிவகுத்தது. இதனைக்கொண்டு  நாட்டின் அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் இதர அரசு திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது.
உலக நாடுகளில், வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் 96 சதவிகிதத்துக்கு மேற்பட்ட நாடுகளில் வருமான வரி இன்றும் நடைமுறையில் இருந்துவருகிறது. 'வரிச் சொர்க்கம்’ என்று சொல்லப்படும் வருமான வரி இல்லாத நாடுகள் இயற்கைவளம் அல்லது எண்ணெய் வளம் மிகுந்ததாகவும், குறைவான மக்கள்தொகையுடனும், வருமான வேறுபாடு அதிக அளவில் இல்லாததாகவும் உள்ளது. இதனால், வருமான வரி இல்லாமல் இந்த அரசுகள் செயல்பட முடிகிறது.  
மொரீசியஸ், சைப்ரஸ், கேமன் தீவுகள், பஹாமா போன்ற சில நாடுகள் தங்கள் நாட்டின் மூலம் மற்ற நாடுகளுக்கு முதலீடு செய்ய சேவை வழிவகுக்கும் கேப்பிட்டல் கெய்ன் டாக்ஸ் மற்றும் இதர வரிகளை ரத்து செய்துள்ளன. இதனால் ஏற்படும் வருமானத்தை மனதில் கொண்டு வருமான வரியை முற்றிலும் ரத்து செய்துள்ளன.
மாற்றுத் திட்டம் என்ன?
வருமான வரி, உற்பத்தி வரி போன்ற வரி விதிப்பினால், அரசாங்கம் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் பெறுகிறது. இந்த வரிகள் ரத்தானால், இந்த வருவாய் நமக்கு வராமலே போகும். இதனை சரிக்கட்ட பா.ஜ.க தலைவர் சொல்லும் மாற்றுத் திட்டம், செய்யப்படும் செலவுகள் அல்லது வங்கிப் பரிவர்த்தனைகள்மேல் 1.5% வரி விதிப்பு செய்வதுதான். இதனைச் சுருக்கமாக, 'செலவு வரி’ என்று சொல்லலாம். இதனால், ஆண்டுக்கு 40 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாகக் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. 'இது வரி விதிப்பைவிட சில மடங்கு கூடுதலான வருமானமாகும்’ என்கிறார் பா.ஜ.க தலைவர்.
மாற்றுத் திட்டத்தின் சவால்கள்!
தற்போதுள்ள வருமான வரி விதிப்பானது, அதிக வருமானம் உள்ளவர்கள் அதிகவரி கட்டவும்; குறைந்த வருமானம் உள்ளவர்கள் குறைந்த வரி கட்டும் வகை யிலும் ஏற்படுத்தப்பட்ட முற்போக்கான வரிவிதிப்பு (Progressive Taxation) முறையாகும்.
ஆனால், செலவு வரி என்பது எல்லாவித செலவுகளுக்கும் அனைத்து மக்களாலும் செலுத்தப்படவேண்டிய வரி. அம்பானி முதல் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் வரை ஒரே விகித வரியைச் செலுத்தவேண்டும். இதனால், ஏழைகள் அதிக ஏழைகளாகவும்; பணக்காரர்கள் அதிக பணக்காரராகவும் மாறவே  வாய்ப்பு அதிகரிக்கும். இதனால், ஏழை - பணக்காரர் வித்தியாசம் பெருகவே செய்யும்.  
வருமான வரிச் சட்டப் பிரிவுகளின்படி, 20,000 ரூபாய்க்கு மேல் கடனாகக் கொடுப்பது, பெறுவது மற்றும் கொள்முதல் செய்வது போன்றவை தவிர்க்கப்படவேண்டிய விதிகளாக தற்போது உள்ளது. வருமான வரிச் சட்டமே ரத்து செய்யும்போது, எப்படி வங்கிப் பரிவர்த்தனைகளை வங்கிகள் மூலம் அமல்படுத்தி அதற்கு வரி விதிக்க முடியும் என்பது ஒரு கேள்விக்குறி.
வருமான வரி நாட்டின் வருவாயாக மட்டும் அல்லாமல், பணச்சலவை மோசடி மற்றும் தீவிரவாதிகளின் செயல்கள் ஆகியவற்றைக் கண்காணிக்க ஏதுவாகும் சட்டமாக இருந்து வருகிறது. இதற்கு மாற்றுத் திட்டத்தில் எப்படி சட்டத் திருத்தம் செய்யப்படும் என்கிற விளக்கம் இல்லை.
ஜிஎஸ்டி (Goods & Services Tax) என்ற வரியை அமல்படுத்த அரசாங்கம் இவ்வளவு ஆண்டுகள் எடுத்துவரும் நிலையில், நீண்டகாலமாக இருந்துவரும் வரிகளை முற்றிலும் நீக்கி, புதிய செலவு வரித் திட்டத்தை ஏற்படுத்தி அமல்படுத்துவது என்பது ஒரு கானல் நீர்போல உள்ளது. புதிய வரிச் சட்டத்தை ஏற்படுத்தி அதை நடைமுறைக்கு கொண்டு வருவது அதிக குளறுபடிக்கே வழிவகுக்கும்.
அரசு நிர்வாகக் குறைகளை அகற்றுவது, குறைந்த வரி விதிப்பு, தொந்தரவில்லாத வரி வசூலிப்பு, வசூலித்த வரியை சரியான முறையில் செலவிடுதல் போன்ற சாத்தியமான மாற்றங்களைச் செய்தாலே போதுமே!

No comments:

Post a Comment