Sunday, 26 January 2014

Nanayam Vikatan - RBI directive on currency notes



ரூபாய் நோட்டு பிரச்னை... ஆர்பிஐ அதிரடி ஏன்?
ஆர்பிஐ-ன் இந்த நடவடிக்கை மூலம் கோடிக் கோடியாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் வெளியே வர வாய்ப்புள்ளது!
ஆண்டுக் குறிப்பிடப்படாத ரூபாய் நோட்டுகள்  திரும்பப் பெறப்படும் என ஆர்பிஐ  அறிவித்தாலும் அறிவித்தது, உடனே நம்மவர்கள் பதறிப்போய்க் கிடக்கிறார்கள். பால்காரரிடம் பத்து ரூபாய்த் தந்தால்கூட, அதன் பின்னால் ஆண்டுக் குறிக்கப்பட்டிருக்கிறதா என்றுதான் பார்த்து வாங்குகிறார். ஆண்டுக் குறிக்கப்படாத ரூபாய் நோட்டு செல்லாது என்கிற வதந்தி பரவவே, குழப்பம் அதிகரித்திருக்கிறது.  
ரூபாய் நோட்டின் பின்புறத்தில் ஆண்டு அச்சிடப்பட்ட நோட்டுகளை மட்டுமே இனி பொதுப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்த வேண்டும். ஆண்டு அச்சிடப்படாத நோட்டுகளை வங்கியில் தந்து  மாற்றிக்கொள்ளலாம். மார்ச் 31-க்குப் பிறகுதான் இது நடைமுறைக்கு வரும் என்பதையும் ஆர்பிஐ தெளிவாகவே சொல்லியிருந்தது. என்றாலும், குழப்பத்துக்கென்னவோ குறைவே இல்லை.
2005-க்குப் பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் சிறிய அளவில் அந்த ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்ட வருடத்தையும் குறிப்பிட்டிருப்பார்கள். 2005-க்கு முந்தைய ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அச்சிடப்பட்ட ஆண்டு பற்றி எந்தக் குறிப்பும் இருக்காது. இப்படி ஆண்டுக் குறிப்பிடப்படாத நோட்டுகளை வங்கிகளில் தந்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்றுதான் ஆர்பிஐ  சொல்லியுள்ளது.  இதுதான் உண்மையே தவிர, ஆண்டுக் குறிப்பிடப்படாத ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது உண்மையல்ல.
மேலும், ஜூலை 1 முதல், ஆண்டு அச்சிடப்படாத 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை 10 எண்ணிக்கைக்கு மேல் மாற்றுவதற்கு வங்கிக்குக் கொண்டுவருபவர்கள் தங்களைப் பற்றிய அடையாளச் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை ஆண்டுப் பற்றிய குறிப்பு இல்லாத ரூபாய் நோட்டுகளை  மாற்றிக்கொள்வதற்கு காலஅவகாசம் தரப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட காலக்கெடு முடிந்து வருபவர்களுக்குத்தான் இந்தக் கட்டுப்பாடு. இந்த விவரங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் ஆர்பிஐ அறிவிப்பைக் கண்டு எந்த வகையிலும் குழம்பத் தேவையில்லை.  
ஆனால், ரிசர்வ் வங்கி எதற்காக இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது எனக் கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்டோம். அதற்கு அவர் தந்த பதில் இதோ:
''இது வரவேற்கப்படவேண்டிய ஒரு முடிவுதான். இதை ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கை என்றுகூடச்சொல்லலாம். கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவது ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்குக் காரணமாக இருக்கலாம்.
ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டி ருந்தால் இந்த நடவடிக்கையின் மூலம் வெளியே கொண்டுவந்துதான் ஆகவேண்டும். அதாவது, எந்த வழியிலாவது அவற்றை வங்கிக் கணக்குக்குக் கொண்டுவந்துதான் ஆகவேண்டும். அப்படிப்பட்ட ஒரு கட்டாயத்தை இந்த  அறிவிப்பு உருவாக் குகிறது. கோடிக் கோடியாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் இதன்மூலம் வெளியே வருவதற்கு வாய்ப்புள்ளது என்று நம்பலாம்.
மொத்தமாக, 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவைத் தாண்டி மாற்றும்போது அடையாளச் சான்றினைத் தரவேண்டும் என்பதும் இன்னொரு  கிடுக்கிப்பிடிதான்.
மற்றபடி இந்த அறிவிப்பின் மூலம் சாமானியர்களுக்கோ அல்லது தினசரிப் பணப் பரிவர்த்தனைகளுக்கோ எந்தச் சிக்கலும் இல்லை'' என்றார்.
இதற்குமுன்பு 25 காசு நாணயம், 1 ரூபாய் நோட்டு, 2 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்தியபோதுகூட ஏற்படாத குழப்பம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
ஆர்.பி.ஐ.-ன் இந்த நடவடிக்கை யானது பல காலமாக அரசாங்கத்தை ஏமாற்றி வருபவர்களுக்குத்தான் என்பதால் சாதாரண மக்களாகிய நாம் எந்தவகையிலும் குழம்பாமல் நிம்மதியாக இருக்கலாம்!

No comments:

Post a Comment