சிறுதொழில் நிறுவனங்கள் : கட்டாய ஆடிட்டிங் அவசியமா?
திருப்பூரில் அட்டைப் பெட்டி தயாரிப்பு தொழிலில் கடந்த பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறார் சஞ்சய். கடந்த நிதி ஆண்டில் மட்டும் அவர் மொத்தமாக விற்பனை செய்த தொகை சுமார் ரூ.95 லட்சம். இவர் தனது கணக்குவழக்குகளைக் கட்டாயம் ஆடிட்டிங் செய்து அறிக்கை சமர்ப்பித்தாக வேண்டுமா, அப்படி செய்யவில்லை என்றால் ஏதாவது அபராதம் விதிப்பார்களா, எவ்வளவுக்கு வரி கட்டுவது என்கிற பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவிக்கிறார். இவர் மட்டுமல்ல, தமிழகம் முழுக்க உள்ள சிறுதொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறவர்களுக்கு இந்தக் கேள்விகள் இருக்கவே செய்கின்றன.
இதற்கான வருமான வரிச் சட்டங் களைத் தெரிந்துகொண்டால் இந்தக் கேள்விகளுக்கு தெளிவான விடை கிடைக்கும். வருமான வரிச் சட்டம் என்ன சொல்கிறது?
வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் தங்களது விற்பனை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அதிகமானால் தங்களது கணக்கு களை கட்டாயத் தணிக்கைக்கு உட்படுத்தி ஆடிட்டரிடம் சான்றிதழ் பெற்று வரித் தாக்கல் செய்வது அவசியம். கடந்த பல வருடங்களாக இந்தத் தொகை ரூ.40 லட்சமாக இருந்தது. நிதி ஆண்டு 2011-12-ல் ரூ.60 லட்சமாகவும் நிதி ஆண்டு 2012-13-ல் ரூ.1 கோடியாகவும் உயர்த்தப் பட்டுள்ளது.
இதுவே மருத்துவர், இன்ஜினீயர் போன்ற சுயசேவை தொழில்புரிவோருக்கான (Professional) ஆண்டு மொத்த வருமானம் ரூ.10 லட்சமாக இருந்த வருமான வரம்பு, நிதி ஆண்டு 2011-12-ல் ரூ.15 லட்சமாகவும் 2012-13-ல் ரூ.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய வருமான வரிச் சட்டப்படி சஞ்சய் தனது கணக்குகளைக் கட்டாயத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டியதில்லை. மேலும், சிறுதொழில்புரிவோர்களுக்கு வரித் தாக்கலை சுலபமாக்கும்படி சட்டத் திருத்தம் 44AD-படி ரூ.1 கோடிக்கு குறைவாக விற்பனை இருந்தால் மொத்த விற்பனையில் 8% உத்தேச வருமானமாக (Presumptive) கருதப்பட்டு அதற்குரிய வரியைச் செலுத்த வேண்டும். உதாரணமாக, சஞ்சய் தனது மொத்த விற்பனையான ரூ.95 லட்சத்தில் 8% கணக்கிட்டு, ரூ.7.6 லட்சத்திற்கு வரிக் கட்டினால் எந்தவித புத்தகங்களையும் பராமரிக்க வேண்டியதில்லை. இந்த உத்தேச வரிச் சட்டத்தை உபயோகப்படுத்துவதன் மூலம் கணக்கு பராமரிப்பு மற்றும் கட்டாயத் தணிக்கை போன்ற சில நடைமுறை சிரமங் களிலிருந்து தப்பிக்கலாம்.
உத்தேச வரிச் சட்டத்தில் சிறுதொழில் செய்கிறவர்களுக்கு பலவிதமான அனுகூலங்கள் கிடைக்கும். என்னென்ன அனுகூலங்கள் தெரியுமா?
வரி விதிப்புக்குரியவர் விருப்பப்பட்டால் அதிக வருமானம் காண்பித்து அதற்கான வரியைக் கட்டலாம்.
வருமான வரிச் சட்ட பிரிவுக்காக கணக்குப் புத்தகங்கள் எதும் பராமரிக்க வேண்டியதில்லை.
உத்தேச வரிச் சட்டப்படி அனைத்து செலவுகளும் (தேய்மானம் உட்பட) கழித்துக்கொண்டதாக கருதப்பட்டு 8% லாபமாகக் கருதப்படும்.
கூட்டு நிறுவனத்தில் (Partnership Firm) பங்குதாரர்கள் சம்பளம் மற்றும் முதலீட்டிற்கான வட்டியைக் கழித்து மீதமுள்ள தொகைக்கு வரி கட்டினால் போதுமானது.
உத்தேசமான வரி விதிப்புக்குரியவர் முன் கூட்டிய வரி (Advance Tax) செலுத்த வேண்டியதில்லை.
உத்தேசமான வரி விதிப்புக்குரியவர் வங்கியில் செலுத்தப்படும் இந்த வியாபாரம் குறித்த ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் விவரம் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை.
இந்த உத்தேச வரிச் சட்டம், யாருக்கெல்லாம் பொருந்தாது என்பது முக்கியமான விஷயம். முதலில், பொருந்துபவர்களுக்கான பட்டியலைச் சொல்கிறேன்.
இந்தியக் குடிமகனான, தனிநபர் (Individual) வணிகம்.
கூட்டாண்மை நிறுவனம் (Partnership Firm) .
இந்து கூட்டுக் குடும்பம் (HUF).
இனி யாருக்கெல்லாம் பொருந்தாது என்பதைச் சொல்கிறேன்.
முகவர்/தரகு (Commission/ Brokerage) மூலம் சம்பாதிக்கும் நபர்.
ஏஜென்சி, வியாபாரி, மருத்துவர், இன்ஜினீயர் போன்ற சுயசேவை தொழில்புரிவோர்
(Professional).
சரக்கு வண்டியை வாடகைக்கு மற்றும் குத்தகைக்கு விடும் வியாபாரி.
உத்தேச வரிச் சட்டத்தில் சாதகமான பல அம்சங்கள் இருந்தாலும் பாதக அம்சங்கள் சில இருக்கவே செய்கின்றன. அதைப் பற்றி இனி பார்ப்போம்.
சில நிறுவனங்களின் மொத்த லாபமே 8 சதவிகிதத்திற்கு குறைவாக இருக்கும். நிகர லாபம் அதைவிட குறைவாக இருக்கும். உதாரணமாக, ரூ.50 லட்சம் விற்பனை செய்துவரும் ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் 3% என்று வைத்துக்கொள்வோம். உத்தேச வரிச் சட்டத்தை இந்த நிறுவனம் பயன்படுத்தினால் இதன் லாபமாக ரூ.4 லட்சத்தை உத்தேசித்து அதற்கு வரி கட்ட வேண்டும். ஆனால், லாபமோ ரூ.1.50 லட்சம் இருக்கும் சூழ்நிலை யில் இல்லாத வருமானத்திற்கு வரி கட்டுவது போல இருக்கும். இந்தச் சூழ்நிலையில் இத்தகைய நிறுவனங்கள் கணக்குப் புத்தகங் களை பராமரித்து அவற்றைக் கட்டாயத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
மேலும், ஆடிட்டர் சான்றிதழுடன் வருமான வரித் தாக்கல் செய்யவேண்டும். இந்தச் சட்டம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்திற்கும் (ரூ.1 கோடிக்கும் குறைவாக விற்பனைப் புரிவோர்) பொருந்தும் என்பது வருத்தமான உண்மை. அதாவது, லாபமே இல்லை என்றாலும் கணக்குப் புத்தகங்களைப் பராமரித்து, அவற்றைக் கட்டாயத் தணிக்கைக்கு உட்படுத்தி, ஆடிட்டரிடம் சான்றிதழ் வாங்கி வரிக் கணக்கு தாக்கல் செய்யவேண்டும்.
அரசின் வருமானத்தை அதிகரிக்கிற அதேநேரத்தில் தொழில் செய்பவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதால்தான் மத்திய அரசாங்கம் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறது. சிறு தொழில் செய்கிறவர்கள் இந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டு, பயன் பெறுவது அவசியம்!
என் சந்தேகம் என்ன வெனில் நீங்கள் குறிப்பிடுவது 44AD என்றாள் அதில் தேய்மானத்தை சேர்க்க கூடாது என்கின்றனர்
ReplyDeleteஉத்தேச வரிச் சட்டப்படி அனைத்து செலவுகளும் (தேய்மானம் உட்பட) கழித்துக்கொண்டதாக கருதப்பட்டு 8% லாபமாகக் கருதப்படும்.
44AD சட்டப்பிரிவுப் படி தேய்மானம் உட்பட அனைத்து செலவுகளும் கழித்துக் கொண்டதாகக் கருதப்படும.
Deleteநல்ல தகவல் நன்றி
ReplyDelete