Monday, 23 September 2013

Is auditing mandatory for SMEs? - article in Nanayam Vikatan by CA G Karthikeyan FCA

சிறுதொழில் நிறுவனங்கள் : கட்டாய ஆடிட்டிங் அவசியமா?

திருப்பூரில் அட்டைப் பெட்டி தயாரிப்பு தொழிலில் கடந்த பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறார் சஞ்சய். கடந்த நிதி ஆண்டில் மட்டும் அவர் மொத்தமாக விற்பனை செய்த தொகை சுமார் ரூ.95 லட்சம். இவர் தனது கணக்குவழக்குகளைக் கட்டாயம் ஆடிட்டிங் செய்து அறிக்கை சமர்ப்பித்தாக  வேண்டுமா, அப்படி செய்யவில்லை என்றால் ஏதாவது அபராதம் விதிப்பார்களா, எவ்வளவுக்கு வரி கட்டுவது என்கிற பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவிக்கிறார். இவர் மட்டுமல்ல, தமிழகம் முழுக்க உள்ள சிறுதொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறவர்களுக்கு இந்தக் கேள்விகள் இருக்கவே செய்கின்றன.  
இதற்கான வருமான வரிச் சட்டங் களைத் தெரிந்துகொண்டால் இந்தக் கேள்விகளுக்கு தெளிவான விடை கிடைக்கும். வருமான வரிச் சட்டம் என்ன சொல்கிறது?
வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் தங்களது விற்பனை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அதிகமானால் தங்களது கணக்கு களை கட்டாயத் தணிக்கைக்கு உட்படுத்தி ஆடிட்டரிடம் சான்றிதழ் பெற்று வரித் தாக்கல் செய்வது அவசியம். கடந்த பல வருடங்களாக இந்தத் தொகை ரூ.40 லட்சமாக இருந்தது. நிதி ஆண்டு 2011-12-ல் ரூ.60 லட்சமாகவும் நிதி ஆண்டு 2012-13-ல் ரூ.1 கோடியாகவும் உயர்த்தப் பட்டுள்ளது.
இதுவே மருத்துவர், இன்ஜினீயர் போன்ற சுயசேவை தொழில்புரிவோருக்கான (Professional) ஆண்டு மொத்த வருமானம் ரூ.10 லட்சமாக இருந்த வருமான வரம்பு, நிதி ஆண்டு 2011-12-ல் ரூ.15 லட்சமாகவும் 2012-13-ல் ரூ.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.   தற்போதைய வருமான வரிச் சட்டப்படி சஞ்சய் தனது கணக்குகளைக் கட்டாயத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டியதில்லை. மேலும், சிறுதொழில்புரிவோர்களுக்கு வரித் தாக்கலை சுலபமாக்கும்படி சட்டத் திருத்தம் 44AD-படி ரூ.1 கோடிக்கு குறைவாக விற்பனை இருந்தால் மொத்த விற்பனையில் 8% உத்தேச வருமானமாக (Presumptive) கருதப்பட்டு அதற்குரிய வரியைச் செலுத்த வேண்டும். உதாரணமாக, சஞ்சய் தனது மொத்த விற்பனையான ரூ.95 லட்சத்தில் 8% கணக்கிட்டு, ரூ.7.6 லட்சத்திற்கு வரிக் கட்டினால் எந்தவித புத்தகங்களையும் பராமரிக்க வேண்டியதில்லை. இந்த உத்தேச வரிச் சட்டத்தை உபயோகப்படுத்துவதன் மூலம் கணக்கு பராமரிப்பு மற்றும் கட்டாயத் தணிக்கை போன்ற சில நடைமுறை சிரமங் களிலிருந்து தப்பிக்கலாம்.
உத்தேச வரிச் சட்டத்தில் சிறுதொழில் செய்கிறவர்களுக்கு பலவிதமான அனுகூலங்கள் கிடைக்கும். என்னென்ன அனுகூலங்கள் தெரியுமா?
வரி விதிப்புக்குரியவர் விருப்பப்பட்டால் அதிக வருமானம் காண்பித்து அதற்கான வரியைக் கட்டலாம்.
வருமான வரிச் சட்ட பிரிவுக்காக கணக்குப் புத்தகங்கள் எதும் பராமரிக்க வேண்டியதில்லை.
 உத்தேச வரிச் சட்டப்படி அனைத்து செலவுகளும் (தேய்மானம் உட்பட) கழித்துக்கொண்டதாக கருதப்பட்டு 8% லாபமாகக் கருதப்படும்.
கூட்டு நிறுவனத்தில் (Partnership Firm) பங்குதாரர்கள் சம்பளம் மற்றும் முதலீட்டிற்கான வட்டியைக் கழித்து மீதமுள்ள தொகைக்கு வரி கட்டினால் போதுமானது.
உத்தேசமான வரி விதிப்புக்குரியவர் முன் கூட்டிய வரி (Advance Tax) செலுத்த வேண்டியதில்லை.
உத்தேசமான வரி விதிப்புக்குரியவர் வங்கியில் செலுத்தப்படும் இந்த வியாபாரம் குறித்த ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் விவரம் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை.
இந்த உத்தேச வரிச் சட்டம், யாருக்கெல்லாம் பொருந்தாது என்பது முக்கியமான விஷயம். முதலில், பொருந்துபவர்களுக்கான பட்டியலைச் சொல்கிறேன்.
இந்தியக் குடிமகனான, தனிநபர் (Individual) வணிகம்.
கூட்டாண்மை நிறுவனம் (Partnership Firm) .
இந்து கூட்டுக் குடும்பம் (HUF).
இனி யாருக்கெல்லாம் பொருந்தாது என்பதைச் சொல்கிறேன்.
முகவர்/தரகு (Commission/ Brokerage) மூலம் சம்பாதிக்கும் நபர்.
ஏஜென்சி, வியாபாரி, மருத்துவர், இன்ஜினீயர் போன்ற சுயசேவை தொழில்புரிவோர்
(Professional).
சரக்கு வண்டியை வாடகைக்கு மற்றும் குத்தகைக்கு விடும் வியாபாரி.
உத்தேச வரிச் சட்டத்தில் சாதகமான பல அம்சங்கள் இருந்தாலும் பாதக அம்சங்கள் சில இருக்கவே செய்கின்றன. அதைப் பற்றி இனி பார்ப்போம்.
சில நிறுவனங்களின் மொத்த லாபமே 8 சதவிகிதத்திற்கு குறைவாக இருக்கும். நிகர லாபம் அதைவிட குறைவாக இருக்கும். உதாரணமாக, ரூ.50 லட்சம் விற்பனை செய்துவரும் ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் 3% என்று வைத்துக்கொள்வோம். உத்தேச வரிச் சட்டத்தை இந்த நிறுவனம் பயன்படுத்தினால் இதன் லாபமாக ரூ.4 லட்சத்தை உத்தேசித்து அதற்கு வரி கட்ட வேண்டும். ஆனால், லாபமோ ரூ.1.50 லட்சம் இருக்கும் சூழ்நிலை யில் இல்லாத வருமானத்திற்கு வரி கட்டுவது போல இருக்கும். இந்தச் சூழ்நிலையில் இத்தகைய நிறுவனங்கள் கணக்குப் புத்தகங் களை பராமரித்து அவற்றைக் கட்டாயத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
மேலும், ஆடிட்டர் சான்றிதழுடன் வருமான வரித் தாக்கல் செய்யவேண்டும். இந்தச் சட்டம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்திற்கும் (ரூ.1 கோடிக்கும் குறைவாக விற்பனைப் புரிவோர்) பொருந்தும் என்பது வருத்தமான உண்மை. அதாவது, லாபமே இல்லை என்றாலும் கணக்குப் புத்தகங்களைப் பராமரித்து, அவற்றைக் கட்டாயத் தணிக்கைக்கு உட்படுத்தி, ஆடிட்டரிடம் சான்றிதழ் வாங்கி வரிக் கணக்கு தாக்கல் செய்யவேண்டும்.
அரசின் வருமானத்தை அதிகரிக்கிற அதேநேரத்தில் தொழில் செய்பவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதால்தான் மத்திய அரசாங்கம் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறது. சிறு தொழில் செய்கிறவர்கள் இந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டு, பயன் பெறுவது அவசியம்!

Tuesday, 10 September 2013

ஒருநபர் கம்பெனி: சிறு தொழிலுக்கு வரப்பிரசாதம் !

இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால்தான் கம்பெனியாக பதிவு செய்ய முடியும் என்கிற நிலை மாறி, ஒரே ஒருவர் நடத்தும் நிறுவனத்தைகூட இனி கம்பெனியாக பதிவு செய்யலாம் என்கிற நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறது சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய கம்பெனிகள் சட்டம். இந்த மாற்றத்தைத் தொழில்முனைவோர்கள் பலமாக வரவேற்றுள்ளனர். இந்தப் புதிய சட்ட விதிமுறையால் தொழில் முனைவோர்களுக்கு என்ன லாபம் என கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

''உலக அளவில் பல நாடுகளில் ஒருநபர் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போதுதான் இதற்கு வழி பிறந்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதலீட்டில் தொடங்கும் தொழில்களைகூட கம்பெனிகளாக இனி பதிவு செய்துகொள்ள முடியும். இது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இதை சிறு தொழிலுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக எடுத்துக்கொள்ளலாம்'' என்றவர், இந்த சட்டத்தின் சாதகமான விஷயங்களையும் குறிப்பிட்டார்.  

கம்பெனி தகுதி!
கம்பெனிகள் பதிவாளரிடத்தில் பதிவு செய்வதன் மூலம் கம்பெனி என்கிற அடையாளம் கிடைக்கிறது. உரிமையாளர் என்கிற அடையாளம் தருகிற நன்மதிப்பைவிட கம்பெனி இயக்குநர் என்கிற நன்மதிப்பு கிடைக்கிறது. இதுதவிர, கம்பெனி என்கிற அடையாளம் கடன் வாங்கும் மதிப்பையும், சமூக அங்கீகாரத்தையும் தரும்.

பொறுப்புகள் வரையறை!
தனிநபரை உரிமையாளராகக்கொண்டு இயங்கும்போது பொறுப்புகளுக்கு வரையறை கிடையாது. தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது எனில், அதாவது தொழிலுக்கு என்று வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாதபோது அந்தப் பொறுப்புகளுக்கு ஈடாக உங்களது சொந்த சொத்துக்களையும் இழக்கவேண்டியிருக்கும். இதுவே கம்பெனியாக பதிவு செய்து கொள்ளும்போது தொழிலில் ஏற்படும் எதிர்பாராத நஷ்டங்களுக்கு சொந்த சொத்துக்களை இழக்க வேண்டிய தில்லை.

தணிக்கை!
நிதி ஆண்டு முடிந்து ஆறு மாதத்திற்குள் தொழிலில் வரவு செலவு / லாப, நஷ்ட விவரங்கள் ஒரு தணிக்கையாளர் மூலம் தணிக்கை செய்யப்படவேண்டும். இந்த தணிக்கை அறிக்கையை கம்பெனிகள் பதிவாளரிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இப்படி வரவு, செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதன் மூலம் கம்பெனியின் செயல்பாடுகள் மீது நம்பகத்தன்மை அதிகரிக்கும். தனிநபரை உரிமையாளராகக்கொண்டு செயல்படும் கம்பெனிக்கு இது கட்டாயமில்லை.

கூட்டங்கள்!
தனி உரிமையாளர்கள் நிறுவனம் என்றால் எந்தக் கூட்டத்தையும் நடத்தத் தேவையில்லை. அவரது போக்கிற்கு தொழிலை நடத்தலாம். ஆனால், கம்பெனியாக பதிவு செய்கிறபோது மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயக்குநர் கூட்டம் நடத்தி, கூட்ட அறிக்கையை பதிவு செய்யவேண்டும். ஆனால், வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடத்த தேவையில்லை. முதன்மை இயக்குநரின் விருப்பப்படி அதிகபட்சம் 15 இயக்குநர்களை நியமித்துக்கொள்ளலாம்.

நாமினிகள்!
உரிமையாளர் நிறுவனமாக இருந்தால் நாமினிகள் அவசியமில்லை. உரிமையாளருக்கு பிறகு அவரது வாரிசோ அல்லது உரிமையாளர் விரும்பும் நபரோ அப்படியே ஏற்று தொழிலை நடத்த முடியும். ஆனால், கம்பெனியாக பதிவு செய்துகொள்ளும்போது நாமினி நியமிக்க வேண்டியது கட்டாயம். இயக்குநருக்கு பிறகு அவரால் நியமிக்கப்பட்ட நாமினி மட்டுமே தொழிலை மேற்கொண்டு நடத்த முடியும்.

இதுதவிர, கம்பெனியை மேற்கொண்டு விரிவுபடுத்த வேண்டும் என்கிறபோது பொது நிறுவனமாக மாற்றிக்கொள்ள முடியும். இதன்மூலம் பொதுமக்களிடமிருந்து பங்கு மூலதனத்தையும் திரட்டிக் கொள்வதற்கான சாத்தியங்கள் உருவாகும்.

இதில் ஒருசில பாதகமான அம்சங் களும் இருக்கவே செய்கிறது. உதாரணமாக, கம்பெனியாகச் செயல்படும்போது அதிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திற்கு 30 சதவிகிதம் வரி கட்டவேண்டும். கம்பெனி எவ்வளவு அதிகமாக வருமானம் ஈட்டினாலும் 30 சதவிகிதம் வரி செலுத்தவேண்டும். இதுவே, உரிமையாளர் நிறுவனமாக இருந்தால் தனிநபர் உச்ச வரம்பு அடிப்படையில் வருமான வரிச் செலுத்தினால் போதும்.

உரிமையாளராக இருந்து செயல்படுவதைக் காட்டிலும் இயக்குநராக இருந்து செயல்படுவது ஒருவகையில் பாதுகாப்பும், தொழிலை மேலும் வளர்க்கவும் கிடைத்த வாய்ப்பாகவும் இந்த சட்டத் திருத்தம் பயன்படலாம். தொழில் முனைவோர்களுக்கு நல்ல வாய்ப்பாக இந்த சட்டம் பயன்படட்டும்.