Showing posts with label NRO. Show all posts
Showing posts with label NRO. Show all posts

Sunday, 4 October 2015

Going abroad on official work?

அரவிந்தனுக்கு சிறு வயது முதலே அவன் அமெரிக்க மாமா மீது கொள்ளை பிரியம். அவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் ஏதேதோ கேள்விப்படாத மிட்டாய்களையும், விளையாட்டு பொருட்களையும் வாங்கி வருவார். ஊரில் அனைவரும் அவரிடம் நலன் விசாரிக்க வந்துவிடுவர். 
என்னதான் மாமாவை மிகவும் பிடித்தாலும், அவர் வந்துவிட்டால் அரவிந்தனுக்கு மவுசு குறைந்துவிடும் என்பதாலோ என்னவோ எப்படியாவது அமெரிக்கா சென்று மாமாவை விட பெரிய ஆள் ஆகிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். 
 
24 வயதானது, இதோ கிளம்பிவிட்டான் அமெரிக்கா! 
 
மாதம் 7000 டாலர் சம்பளம். அறுபதால் பெருக்கி ஊரெல்லாம் போஸ்டர் அடித்தாள் அரவிந்தனின் தாய். ஊரில் அரவிந்தனை பற்றிதான் பேச்சு. தன் வாழ்க்கை லட்சியம் நிறைவேறிய சந்தோஷத்தில் இருந்த அரவிந்தனை அவர் அப்பா ஒரு நாள் ஆபீஸுக்கு வரச்சொன்னார். அங்கே அவருடைய பேங்க் நண்பர் ஆனந்த் அங்கிள் இருந்தார்.
 
பல அறிவுரைகளுக்கு பிறகு, அவன் தான் சம்பாதிக்க இருக்கும் வெளிநாட்டுப் பணத்தை எப்படி சேமிப்பது, எம்மாதிரி வங்கிக்கணக்குகளை வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து கூறத்தொடங்கினார். அத்தனை நேரம் மூடி இருந்த காதுகளை சற்று திறந்துகொண்டார். 
 
வெளிநாடு செல்லும் ஒருவர் ரிசர்வ் வங்கி அனுமதி எதுவும் இல்லாமல் மூன்று பொதுவான கணக்கு வகைகள் வைத்துக் கொள்ள முடியும். 
 
• FCNR 
 
• குடியாளர் அல்லாத சாதாரண ரூபாய் கணக்கு (NRO கணக்கு)
 
• குடியாளர் அல்லாத (வெளிப்புற) ரூபாய் கணக்கு (NRE கணக்கு)
 
-  ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன்,
 
FCNR கணக்குகளை 1 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையான நிரந்தர வைப்பு நிதியாக மட்டுமே துவங்க முடியும். வெளிநாட்டிலிருந்து வங்கிகள் மூலமாக அனுப்பும்அந்நிய செலாவணியிலேயே இக்கணக்கை வைத்துக் கொள்ளலாம். FCNR கணக்குகளிலிருந்து வரும் வட்டி வருமான வரிக்கு உட்படுத்தப்படாது. 
இங்கிருந்து வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லவும் எந்த தடையும் இல்லை. FCNR வைப்புக்கள் உள்ளூர் வைப்புகளை விட உங்கள் வெளிநாட்டு நாணயத்திலிருந்து அதிக வருமானத்தை சம்பாதிக்க சிறந்த வழியாக உள்ளது. சில வங்கிகள் வைப்புகளின் மேல் 85% வரை கடன் அளிக்க தயாராக உள்ளன. 
 
NRO கணக்கு
 
வேலை அல்லது இந்தியாவுக்கு வெளியே ஒரு தொழில் நிறுவுவதற்காக  இந்தியாவை விட்டு செல்பவர் மட்டுமே திறக்க முடியும் என்ற ஒரே வேறுபாட்டைத் தவிர ஒரு சாதாரண வங்கி கணக்கு போன்றே NRO கணக்கு செயல்படும். இந்த கணக்குகளை , வெளிநாட்டு ரூபாய் கணக்குகளிலிருந்து பணம் அனுப்பி திறக்க முடியும். இக்கணக்கு ரூபாயில் வகுக்கப்பட்டடிருக்கும். 
 
இந்தியாவில் NRO கணக்கில் அனுமதிக்கப்பட்ட வைப்புகள்:
 
NRE கணக்குகளில் இருந்து அனுப்பப்படும் பணம்.
இந்தியாவுக்கு வெளியே பெறப்படும் வருமானம்.
தற்காலிக வருகையின் போது கணக்கில் செலுத்தப்படும் பணம்.
வாடகை , ஈவுத்தொகை , ஓய்வூதியம், வட்டி போன்ற உள்ளூர் வருமானம்
சொத்துக்களை விற்று வாங்கிய தொகை
NRO கணக்கில் அனுமதிக்கப்பட்ட எடுப்புகள்:
உள்ளூர் செலவுகள்
NRE கணக்குகளில் செலுத்துவதற்காக பணம் எடுத்தல். 
 
NRE கணக்கு
 
NRE கணக்கும் கிட்டத்தட்ட NRO கணக்கைப் போலவே செயல்படும். ஒரு சில மாற்றங்கள் மட்டும் இருக்கும். அவற்றை கீழே காண்போம். 
 
1. கூட்டுக் கணக்குகள்: இரண்டு அயல்நாடு வாழ் இந்தியர்கள் சொந்தமாக ஒரு கூட்டு கணக்கை NRE அல்லது NRO கணக்கில் இயக்க முடியும். இந்தியாவில் உள்ள நெருங்கிய உறவினர்களோடு சேர்ந்து  NRO கணக்கைத் துவங்கலாம். ஆனால் NRE கணக்கில் கூட்டு உரிமையாளராக ஒரு குடியாளரை சேர்க்க முடியாது. 
 
2. வரிச்  சலுகை: NRE கணக்கிலிருந்து ஈட்டிய வட்டி இந்தியாவில் வரிக்கு உட்பட்டது இல்லை. ஆனால் NRO கணக்கில் வரும் வட்டிக்கு 30% வரியை கழித்துவிட்டு பாக்கியை மட்டுமே அளிப்பர். 
 
3. வெளிநாட்டிற்கு பணத்தை திரும்ப அனுப்புதல்: NRE கணக்குகளில் (அசல் மற்றும் வட்டி) இருந்து வெளிநாட்டிற்கு எந்த தடையும் இன்றி பணத்தை திரும்ப அனுப்பலாம். NRO கணக்கில் இருந்து அனுமதி பெற்ற பின் தான் பணம் அனுப்ப முடியும். ஒரு வருடத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகராக மட்டுமே  வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப முடியும். அதற்கும், பட்டயக் கணக்காளரிடமிருந்து வருமான வரி செலுத்திவிட்டதற்கான சான்றிதழ் பெற வேண்டும்.  
 
4. கடன் பெருதல் : NRO மற்றும் NRE வைப்புகளுக்கு எதிராக ரூபாய் கடன் பெறலாம். ஆனால் அந்நிய செலாவணியில் கடன் பெற NRE வைப்புகள் மட்டுமே உதவும். 
 
5. உள்நாட்டு வருமானத்தை செலுத்துதல் : NRE கணக்கில், உள்நாட்டு வருமானத்தை நேரடியாக செலுத்த முடியாது. 
 
6. வட்டி விகிதம் : NRO மற்றும் NRE வைப்புகளுக்கு, சாதாரண வைப்புகளுக்கு தரும் வட்டியை விட, வட்டி விகிதம் அதிமாகதான் உள்ளது. வட்டி வழங்குவதில் வங்கிகளுக்கு எந்த வரம்பும் அளிக்கப்படுவதில்லை.
குடும்பத்தின் நிதி தேவைகளைப் பொறுத்து எந்த கணக்கை பராமரிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவில் அவசர தேவைகள் இருந்தால், NRO கணக்கிலும், எளிதாக வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப NRE கணக்கிலும், வட்டி சம்பாதிக்க ஒரு வைப்பு வைத்துகொள்வதாக இருந்தால் FCNR கணக்கிலும் பணத்தை முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று கூறி முடித்தார். 
 
“என்னடா? எல்லா பணத்தையும் செல்போன் வாங்கியே கரியாக்க போரயா இல்ல அங்கிள் சொன்னத கொஞ்சமாவது கேட்பாயா” என்று தன் வழக்கமான சிடுசிடுப்புடன் கேட்ட அப்பாவிடம் தலையை ஆட்டி வைத்த அரவிந்தன், தன் பணத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்பதை தானும் அறிந்த மகிழ்ச்சியில் திளைத்தார். 

Can an NRI utilise Indian shares to take loans?

என்ஆர்ஐ இந்தியப் பங்குகளை வைத்து கடன் வாங்க முடியுமா?

ஆடிட்டர் ஜீ. கார்த்திகேயன்
பன்னாட்டு வரி ஆலோசகர், கோவை

  
கோபி, பல ஆண்டுகளுக்கு முன்னரே ஜெர்மனிக்குக் குடிபெயர்ந்தவர். உங்களது பெயர் என்ன என்று நண்பர்கள் கேட்டால் சுருக்கமாக “ஸ்ரீதர வேணு கோபால கிருஷ்ணன்” என்று தனது பெற்றோர்கள் வைத்த பெயரைக் கூறுவார். ஜெர்மன் மொழியின் தாக்கத்தில் கட்டுப்பட்டு அங்கேப் படிக்கச் சென்றவர், தராசு சம்பந்தமாக தொழிலில் ஈடுப்பட்டு அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.

அவரது தந்தை அவர் பெயரில் பல ஆண்டுகளாக ஷேர்களை வாங்கிக் குவித்தார். கோபியும் தனது தந்தையின் பழக்கத்தால் ஏராளமான ஷேர்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மகள் பிருந்தாவுக்கு திருமணம் செய்து கொடுத்த கோபி அடிக்கடி இந்தியா வந்து செல்ல அரம்பித்தார்.
நல்ல மாப்பிள்ளை, கை நிறைய வருமானம் மிகுந்த மரியாதையுடன் பழகி வந்தார். மும்பையில் இருக்கும் மகள் வாடகை வீட்டில் இருந்து வந்தது கோபியின் மனைவி சித்ராவிற்கு உறுத்தலாகவே இருந்தது. மகளுக்கு மும்பையில் ஒரு வீடு வாங்கித் தருமாறு மனைவி சித்ரா அடிக்கடிக் கூறிவந்தார்.

எதையுமே மனனவி சொல்படி கேட்டு நடக்கும் கோபி மகளுக்கு வீட்டை வாங்கித் தர முடிவு செய்தார்.
10வது மாடியில் காற்றோட்டமான 3 படுக்கை அறைகள் கொண்ட அபார்ட்மென்ட். செம்பூர் ஏரியை ரசித்தபடியே மாலை காப்பி அருந்த வேண்டும், உப்பரிகையிலிருந்து பார்த்தால் முழு நிலா தெரிய வேண்டும், அபார்ட்மென்ட்டைச் சுற்றி தோட்டம், நீச்சல் குளம் என்று மகள் பிருந்தாவிற்கு பல ஆசைகள் இருந்தன. அதை அடிக்கடி தன் தாயிடம் கூறி வந்தார்.
செம்பூரில் மகளுக்குப் பிடித்த வீடு குறைந்தபட்சம் ரூ. 2 கோடி ஆகும் என்று தெரித்த பின் அதன் அதற்கான பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என சிந்தித்தார். பல ஆண்டுகளாக வாங்கிய ஷேர்கள் மதிப்பில் உயர்ந்து கணிசமான தொகையைக் எட்டியது. அதற்கு எதிராக கடன் பெற முடியுமா என்று நண்பரிடம் வினாவினார்.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட டீலர் (Authorized Dealer), என்ஆர்ஐ (NRI) க்கு இந்தியப்பங்குகளுக்கு ஏதிராக கடன் கொடுக்க முடியும். அவ்வாறு கொடுக்கப்பட்ட கடனை தனிப்பட்ட செலவுகளுக்கோ அல்லது தொழில் சம்பந்தமான செலவுகளுக்கோ மட்டுமே பயன்படுத்த முடியும்.

அங்கீகரிக்கப்பட்ட டீலர் என்பது ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவன்ங்களைக் குறிக்கின்றது. தொழில் சம்பந்தமானசெலவுகள் என்பதில் , சீட்டுத் தொழில், நிதி நிறுவனம், பண்ணை வீடு கட்டுதல் மற்றும் வர்த்தக வளர்ச்சி உரிமைகள் (Tradable development rights) சம்பந்தமான தொழில்களில் பயன்படுத்த முடியாது. ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும் பங்குகளை வைத்து கடன் பெற முடியாது.

மேலே கூறப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் என்பதில் டவுன்ஷிப் மற்றும் சாலை மற்றும் மேம்பாலக் கட்டமைப்புத் தொழில்கள் பொருந்தாது. அதாவது டவுன்ஷிப் மற்றும் சாலை மற்றும் மேம்பாலக் கட்டமைப்புத் தொழில்கள் நடத்த  இந்தியப் பங்குகளை வைத்து கடன் வாங்க முடியும். 

கோபிக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தன்னிடம் இருக்கும் பங்குகளுக்கு எதிராக ரூ. 1.5 கோடி வரை கடனளிக்க பல வங்கிகள் முன்வந்தன. அதுவே அவருக்கு போதுமானதாகவும் இருந்தது. மனைவியிடம் கூறி ஒப்புதலும் வாங்கி விட்டார்.

ஆனால், அவர் ஜெர்மனியில் இருப்பதால் கடனை எப்படி திரும்பச் செலுத்துவது என்று சந்தேகம் கொண்டார். அவரது பல கேள்விகளுக்கும் அவருடைய மாப்பிள்ளையிடமே பதில் இருந்தது. 

கடன் கொடுக்கும் வங்கி ஒப்புக்கொண்ட கடனை என்ஆர் ஓ (NRO) வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த முடியும். மற்ற வெளிப்புற கணக்குகளில் (NRE, FCNR) செலுத்த முடியாது. அதே போன்று வாங்கிய கடனை இந்தியாவுக்கு  வெளியில் அடைக்க முடியாது. வெளிநாட்டு வங்கிக் கணக்குகளிருந்து இந்தியாவிற்கு அனுப்பியோ, இந்தியாவிலிருக்கும் என்ஆர்ஓ, என்ஆர்இ, எஃப்சிஎன்ஆர் (NRO, NRE , FCNR) கணக்குகள் மூலமாகவோ அல்லது பாதுகாப்பு ஆவணங்களாக அளித்த பங்குகளை விற்றோ மட்டுமே திருப்பி அடைக்க முடியும் என்றார். 


கோபிக்கு அது பெரிய சிக்கலான விஷயமாக தெரியவில்லை. ஆன்லைனிலேயே விண்ணப்பித்தார். பெரிய முறைபாடுகளின்றி சீக்கிரமே கடன் கிடைத்துவிட்டது.

அடடே! நம் இந்தியா நாம் நினைத்ததை விட வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே! என்று ஆனந்தம் அடைந்தார். வீட்டை பதிவு செய்தார். மகளுக்கும் மறுமகனுக்கும் வீடு மிகவும் பிடித்துவிட்டது. மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜெர்மனி திரும்பினார். 

(இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.)