Monday 7 July 2014

Impact of Companies Act 2013 on private companies - Nanayam Vikatan 07th July 2014



கம்பெனி சட்டம் 2013 தனியார் நிறுவனங்களுக்குப் பாதகமே!
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
சத்யம் போன்ற சில கம்பெனிகள் செய்த முறைகேடு, மோசடி மற்றும் தவறுகளை இன்றும் நாம் அசைபோட்டுவரும் நிலையில், சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கம்பெனி சட்டம் (2013) பல மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதோடு, இதுவரை இல்லாத அளவுக்கு அபராதமும், சிறை தண்டனைகளுக்கான சட்டப் பிரிவு களுடன்  அமலுக்கு வந்துள்ளது. இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும் இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1, 2014 முதல் புது கம்பெனி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்குள் அனைத்து பழைய சட்டவிதிகளும் நீக்கப்படும். புதிய நிறுவன சட்ட விதிகளுக்கு ஏற்ப அனைத்து நிறுவனங்களும் தங்களது நடப்புகளை மாற்றியமைத்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இந்தச் சட்ட மாற்றங்களில் முக்கியமான சிலவற்றை ஆராய்வோம்.
  இயக்குநர் நியமனம், ஊதியம் மற்றும் இதர விதிகள்!
 புதிய இயக்குநரை நியமிக்கும்முன் அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். முன்னர் இந்தச் சட்டம் பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளுக்கு மட்டுமே இருந்தது. இப்போது தனியார் கம்பெனி களுக்கும் பொருந்தும்.
நிறுவனர்களுக்கும் இயக்குநர் களுக்கும் தரப்படும் ஊதியத்துக்கு எந்த வரையறையும் கொண்டு வரப்படவில்லை.
அனைத்து கம்பெனிகளிலும் உள்ள இயக்குநர்களில் மூன்றில் ஒரு பங்கு சுயமான இயக்குநர்களாக(Independent Director)  இருக்க வேண்டும்.  அவருக்கு கம்பெனியில்  தனிப்பட்ட லாபநோக்கம் இருக்கக் கூடாது.
ஆடிட்டர் நியமனம்!
கம்பெனியின் ஆடிட்டர் தனிநபராக இருந்தால், அவரது நியமனம் ஐந்து ஆண்டுகளாக இருக்கலாம். 2014 ஏப்ரலுக்குமுன் நியமிக்கப்பட்ட ஆடிட்டர், மீதமுள்ள பதவி காலம் அல்லது மூன்று வருடங்கள் இரண்டில் எது நீண்டதோ, அதுவரை ஆடிட்டராகத் தொடரலாம்.
ஆடிட்டர் குழு ஒரு கூட்டு நிறுவனமாக இருந்தால், மேலே தரப்பட்டுள்ள 5 ஆண்டுகளாக இருக்கும் விதி 10 ஆண்டுகளாக ஆகும். ஆனால், ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திலும் அதை உறுதி செய்ய வேண்டும்.
பெண் இயக்குநர்!
 பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளில் கட்டாயமாக இயக்குநர் குழுவில் ஒரு பெண் இயக்குநர் இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு அது பொருந்தாது.
அதிகபட்ச உறுப்பினர்கள்!
 பிரைவேட் லிமிடெட் கம்பெனி களில் இதுவரை அதிகப்படியாக 50 நபர்கள் மட்டுமே இருக்கலாம் என்று இருந்த சட்டம், தற்போது 200 நபர்கள் பங்குதாரர்களாக இருக்கலாம் என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
  நிதி அறிக்கை!
நிதி அறிக்கைகளை மின்னணு வடிவத்திலும் வைத்துக்கொள்ளலாம். துணை நிறுவனங்கள் இருக்கும் பட்சத்தில் ஒன்றுபட்ட நிதி அறிக்கை (Consolidated Financial Statements)  தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இதுவரை பல சட்டப் பிரிவுகள் தனியார் கம்பெனிகளுக்குப் பொருந்தாது என்று இருந்தது. ஆனால், கம்பெனி சட்டம் 2013 அவை தனியார் லிமிடெட் கம்பெனிகளுக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:
1. டெபாசிட்டுகள் (Deposits)
 இதுவரை கம்பெனிகள் தங்கள் மூலதனம் மற்றும் இருப்புகளில் (reserve) 35% மட்டுமே டெபாசிட்டாகப் பெறலாம் என்றிருந்தது. இது இயக்குநர் மற்றும் பங்குதாரர்களிடம் இருந்து பெறப்படும் டெபாசிட்டுகளுக்குப் பொருந்தாது.
ஆனால், ஏற்கெனவே இயக்குநர் மற்றும் பங்குதாரர்கள் என்று இருந்தது, புதிய சட்ட மாற்றப்படி  இயக்குநர்கள் என்று மாற்றப்பட்டு இருக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 'டெபாசிட்’ வங்கி சாராத நிறுவனங் களுக்குப் பொருந்தும்.
2. கடன் வழங்குதல்!
சென்ற ஆண்டு வரை கம்பெனிகள் தமது இயக்குநர்களுக்கும் அவரது நிறுவனங்களுக்கும் கடன்கள் வழங்க அனுமதி இருந்தது. ஆனால், இனிமேல் அவர்களுக்குக் கடன் தரவோ அல்லது அவரது கடன்களுக்கு உத்தரவாதம் அளிக்கவோ கூடாது.
நிறுவனங்களின் சமூகக் கடமை (Corporate Social Responsibility):
நிறுவனத்தின் நிகர மதிப்பு (Net Worth)  500 கோடிக்கு மேலாகவோ அல்லது கொள்முதல் 1000 கோடிக்கு மேலாகவோ அல்லது லாபம் 5 கோடிக்கு மேலாகவோ இருக்கும் நிலையில் மூன்று வருட சராசரி லாபத்தில் 2% சமூக நலனுக்காகச் செலவிட வேண்டும்.
இத்தனை காலமாகப் பல பெரிய நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அறக்கட்டளைகள் மூலமாகப் பொதுச்சேவை செய்தன. ஆனால், புதிய சிஎஸ்ஆர் விதிகளின்படி, நிறுவனங்களே நேரடியாகப் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும்.
தனிநபர் கம்பெனி (One person Company)
தனிநபர் கம்பெனி என்பது ஒரே ஒரு நபரை கொண்டு, வரையறுக்கப்பட்ட பொறுப்புகளோடு நிறுவப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் ஐந்து தனிநபர் கம்பெனிகள் வரை தொடங்கலாம்
சட்டத்தின் பிற விதிகள்:
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 40 சதவிகிதத்துக்கு மேலான கம்பெனிகள் கணவன் மற்றும் மனைவியை இயக்குநராகக் கொண்ட தனியார் லிமிடெட் கம்பெனிகள்தான். இந்த நிலையில் சிறை தண்டனைகள் மற்றும் அபராதம் போன்ற கட்டுப்பாடுகளால் தொழில் முன்னேற்றத்தைவிட விதிகளைப் பின்பற்றுவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிவரும். இது சிறு நிறுவனங்களின் தொழில் வளர்ச்சியைப் பெரிய அளவில் முடக்கும்.
மொத்தத்தில் கம்பெனி சட்டம் 2013, நிறுவனங்களுக்கு சாதகங்களைவிட அதிகப் பாதகங்களுக்கே வழி வகுக்கும். குறைந்தபட்சம் தனியார் லிமிடெட் கம்பெனிகளுக்காவது இந்தச் சட்டத்திருத்தம் பொருந்தாது என்ற நிலை ஏற்பட வேண்டும். பொருளாதார முன்னேற்றத்தை மனத்தில்கொண்டு செயல்படும் இந்தப் புதிய அரசாங்கம் இதுகுறித்துக் கவனம் செலுத்துமா?

No comments:

Post a Comment