மகாதேவன்... பல
வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வேலை தேடி வந்து செட்டில் ஆனவர்.
சொந்தமாக சில தொழில்களைச் செய்து நஷ்டங்களைச் சந்தித்தவர், பிறகு தனது
நண்பர் ஒருவருடன் பங்குதாரராகச் சேர்ந்துகொண்டு மின்சாதனப் பொருட்கள்
விற்பனை செய்யும் கடையை ஆரம்பித்தார்.
அந்த
பிசினஸ் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. ஆனால், சில வருடங்களுக்கு முன்
அவரது பார்ட்னருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக இருவரும் பிரிய நேர்ந்தது.
இதனால் இருவருக்குமே கடும் நஷ்டம் ஏற்பட்டது. மகாதேவன் தற்போது தனியாக
தொழில் செய்து வந்தாலும் முன்புபோல வருமானமில்லை. இன்னொரு 'நல்ல’ பார்ட்னரை
அவர் தேடி வருகிறார். கூட்டாக தொழில் செய்யும் பலருக்கும் இதுபோன்ற
அனுபவங்கள் இருக்கவே செய்கிறது.
''தனியாக
தொழில் செய்து வெற்றி பெறுவதைவிடவும் கூட்டாகச் சேர்ந்து தொழில்
செய்யும்போது தொழிலில் வெற்றி என்பதும் எளிதாகிறது. ஆனால், இந்த வெற்றியைத்
தொடர்ந்து தக்கவைப்பதிலும், ஆரம்பத்தில் இருக்கும் பரஸ்பர புரிதல்
நாளடைவில் குறைவதாலும் பார்ட்னர்கள் பிரியவேண்டிய நிலை உள்ளது. என்னதான்
ஒப்பந்தம்போட்டு செயல்பட்டாலும், பார்ட்னர்களுக்குள் ஏற்படும் ஈகோ
மோதல்களினால் தொடர்ந்து செயல்பட முடியவில்லை'' என்கிறார் ஆடிட்டர்
ஜி.கார்த்திகேயன்.
''இரு
நபர்கள் முதல் இருபது நபர்கள் வரை சேர்ந்து இந்த வகையிலான பார்ட்னர்ஷிப்
நிறுவனங்களைத் தொடங்க முடியும். பங்குதாரர்கள் சட்டம் 1932 இதை
அனுமதிக்கிறது. சின்ன அளவில் பிசினஸ் செய்வதற்கு மட்டுமல்ல, பெரிய
நிறுவனமாகத் தொடங்குவதைக்கூட சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், ஆரம்பத்தில்
வராத முரண்பாடுகள் வளர வளரத்தான் அதிக அளவில் ஏற்படுகிறது. இதைக்
களையவேண்டும் என்றால் சின்னச் சின்ன ஏற்றத்தாழ்வுகளை உடனே
சரிசெய்யவேண்டும். திட்டமிட்டபடி அடிக்கடி பேசுவது, முறையான பதிவேடுகள்,
மினிட்கள் போன்றவற்றை பராமரிக்கவும்வேண்டும். தொழிலில் குடும்ப
உறுப்பினர்களை ஈடுபடுத்தும்போது அதுகுறித்து தெளிவாக முடிவெடுப்பதும்,
தங்களுக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்களைத் தொழிலுக்குக் கொண்டுவரும்போது
புதிதாக ஒப்பந்தங்களைப் போட்டுக்கொள்ளவும்வேண்டும். இதுதவிர,
ஒப்பந்தப்படி வருமானத்தைப் பிரித்துக்கொள்வதும், முறைப்படி அனுமதி பெறாமல்
புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்காமல் இருப்பதும் அடிப்படையான விஷயங்கள்''
என்றும் சொன்னார் அவர்.
''பொதுவாக,
தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது, மருத்துவம், சட்டம் மற்றும் தணிக்கை
துறையில்தான் இதுபோன்று கூட்டாக இணைந்து தொழில் செய்வது அதிக அளவில்
உள்ளது. ஆனால், இத்தொழில்கள் தனிநபர்களின் திறமை சார்ந்தவை. ஒருவரது
தனித்திறமைக்காக மட்டுமே வாடிக்கையாளர் தேடிவருகிற நிலை வருகிறபோது
கூட்டாளிகளுக்குள் ஈகோ பிரச்னை ஏற்பட வாய்ப்பு நிறையவே உள்ளது'' என்றார்
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான முருகபாரதி.
கூட்டாகத்
தொழில் செய்கிறபோது என்ன விஷயங்களை கவனிக்கவேண்டும்? கூட்டுத்தொழில்
சிக்கலில்லாமல் இருக்க என்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என
ஆடிட்டர் கார்த்திகேயனும் வழக்கறிஞர் முருகபாரதியும் தரும் வழிகாட்டுதல்கள்
இதோ:
ஒப்பந்தங்கள்!
கூட்டு
நிறுவனம் தொடங்கும் பட்சத்தில் முதல் வேலையாக ஒப்பந்தம் செய்துகொள்வது
அவசியம். தொழிலில் ஈடுபடும் நபர்கள், அவர்களது விவரங்கள், முதலீடு விவரம்,
அவரவருக்கு உரிய
பொறுப்புகள், லாபங்களைப் பிரித்துக் கொள்வதில் உள்ள விகிதங்கள் போன்ற
வற்றை தெளிவாக வரையறுத்துக் கொள்ளவேண்டும். இந்த ஒப்பந்தத்தை முறையாக
நிறுவனப் பதிவாளரிடம் பதிவு செய்துகொள்ளவேண்டியது அவசியம். ஒப்பந்தங்களைக்
கூட்டாளிகள் மீறும்பட்சத்தில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் என்ன
என்பது குறித்தும் அதில் விவரமாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.
பொறுப்புகள்!
சில
தொழில்களைப் பொறுத்தவரை, அவரவர் திறமைக்கு ஏற்ப அல்லது முதலீடு
அளவிற்கேற்ப வேலைகளை பிரித்துக்கொள்ளவேண்டும். அவரவரின் பொறுப்புக்கேற்ப
கவனம் செலுத்தி நிறுவனத்தை வளர்க்க வேண்டும். அடுத்தவர்களின்
பொறுப்புகளில், வேலைகளில் தேவையில்லாமல் இன்னொருவர் தலையிடக் கூடாது.
லாப விகிதங்கள்!
ஒப்பந்தத்தில்
எழுதியுள்ளபடி, லாப விகிதங்களைப் பிரித்துக் கொள்ளவேண்டும். ஒப்பந்தத்தை
மீறி ஒருவர் மட்டும் அதிக உரிமை கொண்டாடும்பட்சத்தில் அது ஏற்கெனவே
செய்துகொண்ட ஓப்பந்தத்துக்கு எதிரானது. கூட்டாளிகளில் ஒருவர் அதிக லாபம்
எதிர்பார்க்கிறார் எனில், அதை எந்த வகையில் அனுமதிப்பது என கூட்டாளிகள்
அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர்கள்!
சில
தொழில்களில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு அதிகமாக இருக்கும். இதைத்
தவிர்க்கவேண்டும். அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு தரும் விதமாக தங்கள்
பிள்ளைகளைத் தொழிலுக்கு கொண்டுவரும்போது ஏற்றத் தாழ்வுகள் ஏற்படக்கூடும்.
அதனால் யாருக்கு முக்கியத்துவம் தருவது என்கிற ஈகோ பிரச்னை ஏற்படலாம்.
இதைத் தவிர்க்க புதிதாக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.
கூட்டங்கள்!
கூட்டாளிகள்
அனைவரும் அடிக்கடி சந்திக்கும்விதமாக கூட்டங்களை ஏற்பாடு செய்யவேண்டும்.
பொதுவாக, வருடத்திற்கு நான்கு முறையாவது இதுபோன்ற கூட்டங்களை
நடத்தவேண்டும். தொழிலின் அவ்வப்போதைய நிகழ்வுகள், முன்னேற்றங்கள்
போன்றவற்றை அந்தக் கூட்டத்தில் அலசவேண்டும். மேலும், கூட்ட முடிவுகளை பதிவு
செய்வது, செயல்படுத் துவதற்கான திட்டங்கள் போன்றவற்றையும்
வகுத்துக்கொள்ளவேண்டும்.
ஏற்றத்தாழ்வு!
என்னால்தான்
தொழில் வளர்கிறது, மற்றவர்கள் எதுவும் செய்வதில்லை என்கிற எண்ணத்தை
விடவேண்டும். கூட்டாளிகள் நலனைவிட தொழில் சிறப்பாக நடக்கவேண்டும் என்பதே
பார்ட்னர்களின் நோக்கமாக இருக்கவேண்டும். ஒருவருக்கு ஒருவர் உழைப்பை
பகிர்ந்துகொள்வதுதான் இதன் அடிப்படை.
கணக்கு வழக்குகள்!
நிறுவனத்தின்
அனைத்து கணக்குவழக்கு களையும் முறையாக பதிவு செய்து அதனை தணிக்கை
செய்யவேண்டும். கணக்குவழக்குகள் பார்ட்னர்கள் தெரிந்துகொள்ளும்படி வெளிப்
படையாக இருக்கவேண்டும். பணம் மற்றும் வங்கி விவகாரங்களை கையாள்வதில்
நம்பிக்கை தன்மையுடன் இருக்கவேண்டும். நம்பிக்கை மோசடி செய்யும் விதமாக
தனிபரிவர்த்தனைகள் வைத்துக்கொள்ள கூடாது.
பிரிவு ஒப்பந்தம்!
கூட்டாளிகள்
பிரியவேண்டி வந்தால், முன்பு ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி,
சொத்துக்களையும், பொறுப்புக்களையும் பிரித்துக் கொள்ளவேண்டும்.
கூட்டாளிகளுள் ஒருவர் மட்டும் பிரியவேண்டிய நிலை வந்தாலும், முறையாக பிற
கூட்டாளிகளின் ஒப்புதலுடன் அவருக்கு உரிய சொத்துக்களையும்,
பொறுப்புக்களையும் பிரித்துத் தரவேண்டும். சட்டரீதியாக நீதிமன்றத்துக்குச்
செல்வதைவிட, கூட்டாளிகள் அனைவருக்கும் பொதுவான நபர்கள் மூலம்
பிரித்துக்கொள்வது நல்லது. கூட்டாளிகள் பிரிந்து செல்லும்போது அந்த தொழிலை
தொடர்ந்து நடத்துவது குறித்து பிரிவு ஒப்பந்தத்தில் பதிவு செய்துகொள்ள
வேண்டும். பிரிந்து செல்பவரோ அல்லது அவரது உறவினர்களோ அந்தத் தொழிலை தனியாக
மேற்கொள்வது குறித்தும் இந்த ஒப்பந்தத்தில் தெளிவாக எழுதப்படவேண்டும்.
நற்பெயரை பிரித்துக்கொள்வது!
தொழிலில்
புத்தக மதிப்பில் உள்ள சொத்துக் களை கூட்டாளிகள் விகிதாசார அடிப்படையில்
பிரித்துக்கொள்ள முடியும். ஆனால், தொழிலில் சம்பாதித்துள்ள நற்பெயரை
அனைவரும் பிரித்துக்கொள்ள முடியாது. தொழிலில் உள்ள நற்பெயரை மதிப்பிட்டு
அதற்கான மதிப்பை பிரித்துக்கொள்ளவேண்டும். பிரிந்து செல்லும் கூட்டாளிக்கு
அதற்கு ஈடான சொத்துக்களை தரவேண்டும். இந்த நற்பெயர் மதிப்பை கணக்கிட
வழிமுறைகள் உள்ளன.
இதுபோன்ற
அடிப்படை விஷயங்களில் தெளிவிருந்தால் கூட்டாளிகளுக்குள் சிக்கல்
இருக்காது. ஆரம்பத்திலேயே இதில் தெளிவாக இருந்துவிட்டால் பிற்பாடு பிரச்னை
ஏற்பட்டு பிரியவேண்டிய அவசியமே இருக்காது.
No comments:
Post a Comment