கறுப்புப்பணம் மீட்பு: நிஜத்தில் சாத்தியமா?
ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோவை.
''நாங்கள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் 100 நாட்களில் வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள கறுப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவோம். அந்தப் பணத்தை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவோம்'' என்று சொல்லி யிருக்கிறார் பா.ஜ.க.வின் தலைவர் ராஜ்நாத் சிங். இந்த அறிவிப்பை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாலும், இது நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது முக்கியமான விஷயம்.
வெளிநாடுகளில் கறுப்புப்பணம் பதுக்கிவைத்திருப்போர் பட்டியலில் சீனா மற்றும் மெக்சிகோ நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், இந்தியா எட்டாம் இடத்தில் உள்ளது. பலவகையில் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்படும் பெரும்பான்மை கறுப்புப்பணம் வங்கிகளிலும், வரிச் சொர்க்கம் (Tax Heaven)என்று கூறப்படும் நாடுகளிலும் முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் பெரும்பான்மை பணம் பின்நாட்களில் வரும் அரசியல் மற்றும் வியாபாரத் தேவையை மனத்தில்கொண்டு தேக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.
இத்தகைய கறுப்புப்பணம் அரசியல்வாதிகள் மற்றும் சில பெரும் தொழிலதிபர்களது லஞ்சம் மற்றும் ஊழல் வகையைச் சேர்ந்தது என்பதால் இந்தப் பணத்தை மீட்டுக்கொண்டுவருவோம் என்று யாராவது சொன்னாலே, மக்கள் ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
இரண்டு சாத்தியங்கள்!
இந்தப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவது இரண்டுவிதங்களில் சாத்தியம். ஒன்று, கறுப்புப் பணத்தைத் தீவிர அரசாங்க நடவடிக்கை மூலம் பிறநாடுகளுடன் உள்ள ரகசிய ஒப்பந்த அடிப்படையில் பெற்று, அதற்கான முயற்சிகளைச் செய்து அதை மீட்பது.
இதன்படி, அரசாங்கம் மற்ற நாடுகளுக்கிடையே உள்ள இருநாட்டு ஒப்பந்தங்களின்படி, தகவல் பெறும் உரிமையை நிலைநாட்டி போதிய தகவல்களைப் பெற்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு கறுப்புப்பணத்தை நமது நாட்டுக்கு மீட்டுக்கொண்டுவருவது. இந்தக் குற்றத்துக்குண்டானவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி அதற்கான தண்டனையைப் பெற வைப்பது.
இரண்டாவது, கொண்டு சென்றவர் தாமாகவே முன்வந்து இந்தியாவுக்குள் மீண்டும் கொண்டுவர திட்டங்களை அறிவிப்பது. இதன்படி, இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுகளில் மூன்றுமுறைக்குக் குறையாமல் 'தாமாக முன்வந்து வரி செலுத்தும்’ திட்டங்களை (Voluntary Disclosure of Income Scheme (VDIS) வருமான வரித்துறை அறிமுகம் செய்தது.
கடைசியாக 1997-ல் அறிமுகம் செய்த திட்டத்தில் சுமார் 3,50,000 வரிதாரர்கள் சுமார் ரூ.7,800 கோடி கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவந்து அதற்கான வரியைச் செலுத்தினர். ஆனால், இவை அனைத்தும் உள்நாட்டில் இருக்கும் கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவர அறிவிக்கப்பட்ட திட்டங்கள். வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப்பணத்தைக் கொண்டுவர இதுவரை எந்த வகையிலும் முயற்சி செய்தபாடில்லை.
ஆனால், பல வெளிநாடுகள் இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றிகண்டுள்ளன. வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்களை அறிவித்து வரி மற்றும் அபராதம் செலுத்தி சிறைத் தண்டனையிலிருந்து விடுபடும் திட்டத்தை முதன்முதலில் அறிவித்தது ஜெர்மனிதான். அதன்பின் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல், கிரீஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் இத்தகைய திட்டத்தை அறிமுகம் செய்து கறுப்புப்பணத்தைத் தமது நாட்டுக்குக் கொண்டுவரும்படி செய்துள்ளன.
அமெரிக்காவின் அதிபராக ஒபாமா பதவியேற்றபின் 2009 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் OVDI (Offshore Voluntary Disclosure Initiative) ñŸÁ‹ OVDP (Offshore Voluntary Disclosure Programme) என்னும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்தப் பொதுமன்னிப்புத் திட்டத்தில்
(Amnesty) அமெரிக்கக் குடிமக்கள் சுமார் 33,000 பேர் 5 பில்லியன் டாலர் அளவுக்கு வரி மற்றும் அபராதத்தைச் செலுத்தியுள்ளனர். இந்தத் திட்டத்தை மூன்றாவது முறையாக கடந்த ஆண்டும் அமெரிக்க அரசாங்கம் அறிமுகம் செய்ததைப் பார்க்கும்போது இதன் முக்கியத்துவமும் வெற்றியின் அளவும் புரிகிறது.
வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் இத்தகைய பொது மன்னிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வெற்றி அடைந்திருக்கும்நிலையில், இந்தியாவும் இந்த முயற்சி குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவைவிட்டு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட கறுப்புப்பணம் இந்திய மண்ணுக்குள் வர வாய்ப்பாக இருக்கும்.
இவர்களைத் தண்டனையிலிருந்து மன்னிப்பது நேர்மையாக வரி செலுத்துவோரை நிச்சயம் ஏளனப் படுத்துவதாக இருக்கும். ஆனால், தண்டிக்கும் விஷயத்தில் நாம் உறுதியாக இருந்தால், கறுப்புப்பணம் நம் நாட்டுக்குள் வராமலே போய்விடும். அந்நிய செலாவணி தொடர்பான சொத்துகள் இந்தியாவுக்குள் வரி மற்றும் அபராதத்தோடு வர வாய்ப்பு இருக்குமானால் அதைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
இந்திய வரிதாரர்கள் வெளிநாட்டில் உள்ள சொத்துகள் மற்றும் வெளிநாட்டு வருமானம் குறித்து விவரம் தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரிச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது ஒரு நல்ல முயற்சியே.
இனி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நூறு நாட்களில் கறுப்புப்பணம் மீட்டுக் கொண்டு வரப்படும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. என்றாலும், அதற்கான முனைப்பு இருப்பது வரவேற்கத்தக்கது. இது வெறும் தேர்தல் பேச்சாக மட்டும் இல்லாமல், சீரிய முயற்சியின் மூலம் கறுப்புப்பணத்தின் ஒரு பகுதியாவது இந்தியாவுக்கு வரும்பட்சத்தில் மின் உற்பத்தி, கட்டமைப்பு (Infrastructure), சுகாதாரம், கல்வி போன்ற முக்கியத் திட்டங்களுக்கு வெகுவாகப் பயன்படும் என்பதில் சந்தேகமே இல்லை.